தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதற்காக 36 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஆத்தூரை சேர்ந்த வீரகுமார், வேலூர் மாவட்டம் சின்ன அணைக்கட்டைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி - ஒட்டன்சத்திரம் சாலையில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து 7.7.2020 அன்று அந்த சாலையில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது ஆத்தூர் பிரிவு அருகில் ஒரு ஆட்டோவில் 2 பேர் வந்தனர். அப்போது ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
இதில் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதற்காக 36 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வீரகுமார் (வயது 36), வேலூர் மாவட்டம் சின்ன அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (37) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திரன் ஆஜரானார். விசாரணை முடிவில், வீரகுமார், சுரேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.
மற்றொரு வழக்கு
பாலியல் தொந்தரவுக்கு உள்ளான செவிலியர் இடமாற்றத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சொல்லியும் இதுவரை தாக்கல் செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் அமுதா, மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து செவிலியராக பணியாற்றினேன். அங்குள்ள வட்டார மருத்துவ அதிகாரி எனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தார். இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு சுகாதாரத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தேன்.
இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது வரை அந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையே என்னை அங்கிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குரங்கனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றினர். என்னை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "வட்டார மருத்துவ அதிகாரி மணிகண்டன் மீது மனுதாரர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கண்டமனூர் வட்டார மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டும், பலனில்லை. இது இந்த நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மனுதாரர் புகார் மீதான விசாரணை அறிக்கையை அதிகாரிகளிடம் இருந்து பெற பலமுறை முயற்சித்தும் முடியவில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.மனுதாரரின் புகார் சட்டப்படி கையாளப்படவில்லை. எனவே மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.சட்டப்படி மனுதாரரின் புகாரை முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் எடுக்க வேண்டும். மனுதாரர் புகாரை முறையாக விசாரிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்