கேரள மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 9ந் தேதி தனியார் பேருந்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

கேரளா, பொதுவாகப் பாராட்டப்படும் ஒரு கல்வி, சுகாதாரம், சமூகநீதி முன்நிலை மாநிலம். ஆனால் அங்கு வரும் வாரம் மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் வருகிற ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற இருக்கும் இரண்டு முக்கிய வேலைநிறுத்தங்கள் என்றே கூறலாம். முதலில் ஜூலை 9ம் தேதி, மாநிலம் முழுக்க தனியார் பேருந்து சங்கங்கள் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடத்துகின்றன. கேரளாவில் தினசரி 12,000க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இவை மாணவர்கள், தொழிலாளர்கள், கிராமப்புற மக்களுக்கெல்லாம் முதன்மை போக்குவரத்து வசதி. ஆனால் டீசல் விலை உயர்வு, காப்பீட்டு செலவுகள் போன்ற காரணங்களால் தற்போதைய கட்டணம் போதவில்லை என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

டீசல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்க வேண்டும். காப்பீடு பிரீமியம் கட்டண உயர்வை கட்டுப்படுத்தல் வேண்டும். நஷ்ட ஈடு அல்லது அரசின் நேரடி உதவி வேண்டும். இதுதான் பிரச்சனையா என அதிகாரிகள் நெருக்கடி பேச்சுவார்த்தை நடத்தினாலும், சங்கங்கள் தங்கள் நிலைப்பாட்டை விட்டு மாறவில்லை. இதனால் செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்துகள் ஓடாமல் போனால், கேரள அரசு பேருந்துகள் மட்டுமே சேவை செய்யும் நிலை ஏற்படும். அவற்றும் போதாமல், அதிக சிரமம், கூட்டம், பரபரப்பு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து ஜூலை 10ம் தேதி நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தம் தேசிய அளவிலானது. சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் பணிச்சட்ட திருத்தங்கள், தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் நல திட்டங்களில் சலுகை குறைப்பு போன்றவற்றுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளன. தொழிலாளர் நலத் திட்டங்களை உறுதி செய்தல்வேலைவாய்ப்பு பாதுகாப்பு வழங்கல் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு விவசாய, தொழில்சங்க விரோத சட்டங்களை திரும்ப பெறுதல் இதனால் புதன்கிழமை வங்கி, அரசு அலுவலகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள அரசு இதை மிக முக்கியமாகக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை உத்தரவு வழங்கியுள்ளது. அவசர சுகாதார சேவைகள், உணவு பொருள் விநியோகம், தண்ணீர் விநியோகம் போன்றவை பாதிக்கப்படாத வகையில் சீரான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அவசர பயணங்களை தவிர்க்க வேண்டும். மருத்துவ தேவைகளை முன்பே திட்டமிட வேண்டும். மாற்று போக்குவரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவும், பள்ளி–கல்லூரிகள், அலுவலகங்கள் வேலை நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என கணக்கிட்டு செயல்படவும். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் ஒரு புறம் இருக்க, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனால் அரசு உடனடி பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு நல்ல தீர்வை கண்டறிந்து மக்களின் சிரமங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.