தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பெண்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த குமார், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகர்ணா, முகமது யாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்கள் 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும், குமார் உட்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். தனலெட்சுமி உட்பட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.


 




மற்றொரு வழக்கு


துவரங்குறிச்சி பகுதியில் 28ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா பூதநாயகி அம்மன் கோயிலில் இருந்து துவரங்குறிச்சி பேருந்து நிலையம் வரை பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரிய வழக்கை நாளை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை


திருச்சியை சேர்ந்த பரமசிவன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "விஸ்வகர்மா ஹிந்து பரிசாத் அமைப்பின் சார்பாக  வருடம் தோறும் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறோம். 


இந்நிலையில் கடந்த 19.08.2022 அன்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்திற்காக பூதநாயகி அம்மன் கோவிலில் இருந்து துவரங்குறிச்சி பேருந்து நிலையம் வரை பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி அதிகாரியிடம் விண்ணப்பித்தோம்.  ஆனால் 18.08.2022 அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தனர். 


இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்கள் நீதிமன்றம் விடுமுறையில் இருந்ததால் எங்களது பேரணியை 28.08.2022 ஒத்திவைத்தோம்.  எனவே, 28ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடத்தப்படும் பூதநாயகி அம்மன் கோவிலிருந்து துவரங்குறிச்சி பேருந்து நிலையம் வரை பேரணி நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், துவரங்குறிச்சி கிருஷ்ணா ஜெயந்தி விழா பேரணி நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பேரணி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து நீதிபதி, வழக்கு குறித்து அரசு தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.