ஒவ்வொரு முறை ஜல்லிக்கட்டு நடைபெறும் போதும், ஏதாவது ஒரு சுவாரஸ்யம் வெளிப்படும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா... நடக்காதா... என அனைவரும் எதிர்பார்ந்திருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. இன்னும் பாலமேடு, அலங்காநல்லூர் பாக்கி இருக்கிறது. 




இதற்கிடையில் நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், அனைவரையும் சிறுவன் ஒருவன் கவர்ந்ததை நாம் அறிந்திருப்போம். பள்ளி செல்ல வேண்டிய வயதில், திமில் நிறைந்த காளையோடு திமிராக களத்தில் வந்து பரிசு பெற்றச் சென்ற அந்த சிறுவனை வீடியோவில் நாம் பார்த்தோம். ஆனால், அவன் அழைத்து வந்த காளையின் பின்னணியில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது.



ஆம்... சிறுவன் அழைத்து வந்த காளையின் பெயர் கருப்புச்சாமி. அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆலடி என்பவரது காளை அது. ஜல்லிக்கட்டு காளையை பிள்ளையாக வளர்ப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. கருப்புச்சாமியும் அப்படி தான் வளர்ந்தான். அவனோடு இன்னொருவனும் வளர்ந்தான், அவன் பெயர் ராக்கி. அது நாய் என்று சொன்னால், உரிமையாளர் கோபப்படுவார். அதையும் அவர்கள் வீட்டு பிள்ளையாக தான் வளர்க்கிறார்கள். ஒரே கொட்டத்தில் அருகருகே வளர்ந்த கருப்புச்சாமியும், ராக்கியும், குழந்தையிலிருந்தே நெருக்கம்.


நெருக்கம் நட்பாகி, ஜல்லிக்கட்டு போகும் போது, ராக்கி வந்தால் தான் கருப்புச்சாமி குஷியாவானாம். ஒவ்வொரு களத்திற்கும் காளையும், நாயையும் அழைத்துச் செல்லும் ஆலடியும் அவரது மகனும், திரும்பும் போது பரிசோடு தான் வருவார்களாம். ராக்கி இருக்கும் போது, வேறு யாரும் கருப்புசாமி மீது கை வைக்க முடியாதாம். கருப்புசாமிக்கு காவலன் ராக்கி தானாம்.




நேற்று அவனியாபுரத்திலும் கருப்புச்சாமி-ராக்கி வெற்றி கூட்டணி தொடர்ந்தது. எதிர்பார்த்த படியே, காளை கருப்புச்சாமியை யாரும் பிடிக்கவில்லை. இதனால் காளை வெற்றி பெற்று, உரிமையாளர் ஆலடிக்கு அண்டா, குண்டா என ஒரே பரிசு மழை தான். இது குறித்து உரிமையாளர் ஆலடியிடம் கேட்ட போது, ‛‛இதுக ரெண்டுமே ஒன்னா தான் சுத்தும்; ஒன்னுக்குகொன்னு விட்டுத்தராது. பொதுவா நாயும்-மாடும் சேராது. அதுகளுக்கு ஆகாது. ஆனால், ராக்கியும், கருப்புச்சாமியும் அதற்கு மாறாக இருப்பார்கள். அவர்கள் வளர்ந்த விதம் அப்படி. 


ஜல்லிக்கட்டுக்கும் நாய்க்கு என்ன சம்மந்தம் என்பார்கள். ஆனால்,அது காளை வாடிவாசலில் பாயும் வரை பின்னாலயே வந்து நிற்கும். வீட்டிலும் பாதுகாப்பாக நிற்கும். அது ரெண்டு அண்ணன், தம்பி மாதிரி தான் பழகுங்க. எங்கேயும் பரிசு இல்லாமல் வீடு திரும்பியதில்லை,’’ என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண