2019ம் ஆண்டின் அறிவிப்பின்படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ள கோரிய வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

தஞ்சையைச் சேர்ந்த முருகானந்தம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் டிஆர்பி சார்பில் வெளியானது.

 

ஆனால், நியமன நடைமுறைகள் தொடரவில்லை.  தற்போது, உயர்கல்வித் துறை முதன்மை செயலர் தரப்பில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

 

அதில், கடந்த 2019ல் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்தும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கியும், தேர்வின் மூலம் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

 

50 வயது வரையுள்ள பலர் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறோம். ஆனால், எங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். தேர்வு மூலம் தேர்வு செய்வது எங்களை பாதிக்கும். 

 

எனவே, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2019ம் ஆண்டின் அறிவிப்பின் படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதி, இந்த வழக்கின் முடிவு நீதிமன்றத்தின் இறுதி உத்தரவிற்கு உட்பட்டது. மேலும் வழக்கு குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

 

 





மற்றொரு வழக்கு





 



















தல்லாகுளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை அலுவலகம், சட்டக்கல்லூரி, டிஇஓ அலுவலகம், மதுரை மாநகராட்சி மற்றும் பிற அரசு அலுவலகங்களை அகற்ற கோரி 2016ல் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மேலூரைச் கோபாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016ல் தாக்கல் செய்த மனு.

அதில், "மதுரை நகரின் முக்கிய நீராதாரமாக தல்லாகுளம் கண்மாய் உள்ளது. 52 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கண்மாயில் வணிக வரித்துறை அலுவலகம், சட்டக்கல்லூரி, டிஇஓ மற்றும் மாநகராட்சி அலுவலகம் என படிப்படியாக அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன. மேலும் தல்லாகுளம் கண்மாய் பகுதியில் 14.15 ஏக்கர் பரப்பளவில் உலக தமிழ் சங்கத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.

 

நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியாக தல்லாகுளம் கண்மாய் அறிவிக்கப்படவில்லை. எனவே, தல்லாகுளம் கண்மாயில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்றிவிட்டு, பழைய நிலைக்கு கொண்டு வரவும், புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில்,

 

* நீர்நிலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது என்பதில் இருவேறு கருத்து இல்லை. 

 

* 50 ஆண்டுக்கும் மேலாக பல கட்டிடங்கள் உள்ளன. இதில், அரசு அலுவலகங்களும் உள்ளன. 

 

* தற்போதைய நிலையில் கண்மாயை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்பது அவ்வளவு சாத்தியம் இல்லை. 

 

* இனிமேல் தற்போதுள்ள கட்டிடங்கள் தவிர்த்து. இனி எந்தவிதமான ஆக்கிரமிப்பிற்கும் நிலம் எடுக்கப்படாது என அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

எனவே, மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்பதால் இந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.