அக்னிபத் ராணுவ ஆட் சேர்ப்பு திட்டம், இளைஞர்கள் மத்தியில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது விகிதம் குறைக்கப்பட்டு ஓய்வூதியத்திற்கான செலவு குறைக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு போராட்டம் விரிவடைந்துள்ளது.








நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது. ஆயுதப் படைகளில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் நாட்டின் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவதற்கான அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அக்னிபாத் எதிர்ப்பு தொடர்பாக போராட்டம் நடத்தியதாக  சு.வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





மதுரையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தின் போது ரயில் நிலையத்திற்கு உள்ளே போராட்டக்காரர்கள் செல்வதை தடுக்க முயன்ற ஆயுதப்படை தலைமை காவலர் மணிராஜா என்பவரை, தத்தனேரியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் பிச்சை கன்னத்தில் அறைந்து தாக்கினார்.

 

இந்த தாக்குதலால் காவலருக்கு கன்னத்திலும், வலது கையிலும் லேசாக காயம் ஏற்படுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும் திலகர் திடல் காவல் நிலையத்தில் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 458 பேர் மீது  திலகர் திடல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.