அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ராஜ்சத்யன் ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “அதிமுகவில் இருந்து செந்தில் பாலாஜி சென்றார் எனும் தகுதியை இழந்து விட்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் 7,200 கோடி ரூபாயை ஊழல் செய்து உள்ளார் செந்தில் பாலாஜி. ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது.
ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா? சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பெயரை கலைஞர் நாடு என மாற்றுவார். தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் ஸ்டாலின் கோபமாக இருக்கிறார்கள். அதனால் தான் குடியரசு தலைவர், பீகார் முதல்வர் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வரவில்லை. செந்தில் பாலாஜி வாயை திறந்தால் முதல்வர் வீட்டுக்கு போய் விடுவார் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்ததடுத்து ரெய்டுகள் வரும். அதிமுக - பாஜக கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னையில் நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார். அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. திமுக ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதிமுகவினர் உறங்க கூடாது” எனப் பேசினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ஒரே சிந்தனையில் மக்கள் உள்ளனர்.மாவட்ட செயலாளர்கள் தனித்தனியாக நடத்துவதை விட சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தான் கெத்தாக உள்ளது. இந்த ஆட்சியை நினைத்தால் தமிழக மக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. நாள்தோறும் முதல்வர் மக்கள் மீது வரி மேல் வரி விதிக்கிறார். மக்கள் துன்பப்படுவது முதல்வருக்கு தெரிகிறதா தெரியவில்லையா என்பது தெரியவில்லை. சாலைவரியை கூட முதல்வர் உயர்த்தி உள்ளார். இப்போது மட்டுமல்ல எப்போதுமே பொய்யை சொல்லித்தான் திமுக ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வறட்சி, பிரச்சனை, நமது உரிமைகள் எல்லாம் அண்டை மாநிலங்களிடம் விட்டு கொடுத்துவிடுவார்கள். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கஞ்சா,கஞ்சா மிட்டாய், மது, போதை தான் உள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. கள்ளச்சாராய மரணங்கள் என்கிற அவலநிலை திமுக ஆட்சியில் மட்டுமே நிகழுகிறது. 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகமாக பெற்று தன் தலைவனுக்கு பணத்தை கொண்டு போய் சேர்த்த செந்தில்பாலாஜி இன்று சரியாக மாட்டிக்கொண்டார்.
பாலாஜி நெஞ்சுவலி என்று சொல்வதெல்லாம் தன்னை பாதுகாத்து கொள்ளத்தான். அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக செந்தில்பாலாஜி இந்த நாடக அரங்கேற்றத்தை நடத்துகிறாரா என சந்தேகிக்க தோணுகிறது. செந்தில் பாலாஜிக்கு மூன்று மாத ஓய்வு கேட்பது சந்தேகமாக உள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 30ஆயிரம் கோடி குறித்து வாய் திறக்க மனது வைத்தால் திமுக ஜெயிலுக்கு போவது உறுதி. அமைச்சர் பி.டி.ஆர். சொன்ன 30,000 கோடி விவகாரம் தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு காலத்திலாவது மின் கணக்கு மாதம் தோறும் எடுக்கப்படுமா என்றால், அதுவும் நடக்காது என்று அவரே தெரிவித்து விட்டார். இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, மாவட்ட ஆட்சியர் தள்ளி விடப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி பேணி காக்கப்படுகிறது என தெரிய வருகிறது, நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20 ல் மதுரையில் நடைபெறும் மாநாடு அதிமுகவிற்கு புகழை சேர்க்கும்” எனப் பேசினார்.
டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - https://t.me/abpnaduofficial