தூத்துக்குடி - மதுரை மாநில நெடுஞ்சாலை கடந்த 2007ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக சுமார் இரு நூறு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சுமார் 140 கி.மீ சாலை தரம் உயர்த்தப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து எட்டையபுரம் - சிந்தலக்கரை - அருப்புக்கோட்டை - மதுரை வரையிலும், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து அருப்புக் கோட்டை - சிந்தலக்கரை - தூத்துக்குடி வரை உள்ள சாலையின் மத்தியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு இரு வேறு சாலையாக போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் இருந்து மதுரை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்வதற்கும், சென்னை, மும்பை, குஜராத், விசாகபட்டிணம் போன்ற துறைமுகங்களிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்வதற்கும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகர சுற்றுவட்டாரங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருச்செந்தூர் முருகன் கோயில் செல்வதற்கும் இச்சாலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தவிர தேசிய நெடுஞ்சாலை தரமான சாலையாக இருப்பதால் பயண நேரம் மிகவும் குறைவாக உள்ளது.
இந்நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிந்தலக்கரை கிராமத்தில் ஊருக்கு மேல்புறம் நீர்வளத்துறைக்கு சொந்தமான பாசன கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மறுகால் தண்ணீர் ஓடையின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்ளது. 2007க்கு முன்பு மாநில நெடுஞ்சாலை இருவழிச்சாலையாக இருந்த போது அப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் சிந்தலக்கரையில் இருந்து எட்டையபுரம் நோக்கி செல்லும் சாலையில் உள்ளது. சுமார் 200 மீட்டருக்கு முன்பிருந்து சாலை ஒடுக்கமாகவும், பாலம் குறுகலாகவும் உள்ளது. தொலை தூரத்தில் இருந்து அதிவேகமாக வரக்கூடிய வாகனங்கள் குறுகலான பாலத்தை கவனிக்காமல் சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த 17 ஆண்டுகளில் இப்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதி பல உயிர்கள் பலியாகி உள்ளன. ஒவ்வொரு வாரமும் இடிந்த பக்கவாட்டு சுவர் நெடுஞ்சாலை துறையால் கட்டப்படுகிறது. மீண்டும், மீண்டும் உடைந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலியாகிறது. இக்குறுகலான பாலத்தை இடித்துவிட்டு வாகனங்கள் தாரளமாக செல்லவும், சிந்தலக்கரை பஸ் நிறுத்தத்திலிருந்து பாலம் வரை உள்ள வளைவு சாலையை அகலப்படுத்தி விபத்து ஏற்படா வண்ணம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
இதுதொடர்பாக கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், நெடுஞ்சாலைதுறை ஆணையருக்கு எழுதியுள்ள மனுவில், பெரிய விபத்துகள் நடைபெறும் முன்பாக விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டு உள்ளார்.