காஞ்சிபுரத்தில் 2 வழித்தடங்களுக்கான புதிய நகரப் பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் முதல் ஆளாக பயணித்த காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன்
கோயில் நகரம் காஞ்சிபுரம்
கோயில் நகரமாகவும், சுற்றுலாத் தளமாகவும் விளங்குகின்ற காஞ்சிபுரம் மாநகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நகரப் பேருந்து சேவையை (Town Bus Service) கொண்டுவர வேண்டுமென்பதை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே டவுன் பஸ் இல்லாததால், ஷேர் ஆட்டோ பெருக்கம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 09.09.2025 அன்று காஞ்சிபுரத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஆய்வுக்காகவும் வருகைத் தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் தஉதயநிதி ஸ்டாலினிடம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிந்துரையின் படி, தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவுபடி இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
நகரப் பேருந்தின் வழித்தடம் என்ன ?
1. அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டை – இரயில் நிலையம் – டோல்கேட் – பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வரையில் ஒரு பேருந்து சேவையும்
2) ஒலிமுகமதுபேட்டை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - செவிலிமேடு வரையில் ஒரு பேருந்து சேவையும் இயக்கப்பட உள்ளது
திட்டத்தை துவங்கி வைத்த எம்.எல்.ஏ
இரண்டு வழித்தடங்களில் செல்லும் புதிய நகரப் பேருந்து சேவையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கொடியசைத்து துவக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து முதல் ஆளாக பேருந்தில் ஏறி பேருந்து நிலையத்தில் இருந்து ரங்சாமி குளம் பேருந்து நிறுத்தம் வரை பயணம் செய்தார். பேருந்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் உடன் பயணித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டப் பொருளாளர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம்,மாநகரச் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன் ,ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அலுவலர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.