காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான ரஞ்சித் குமார் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியு வருவது பாராட்டுகளை பெற்று வருகிறது.

அரசு பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் முன்னாள் கவுன்சிலரும், ஓ.பி.எஸ் அதிமுக அணி மாவட்ட செயலாளருமான ஆர்.வி.ரஞ்சித் குமார் ஆண்டுதோறும் அவரது ஒன்றிய குழு பகுதிகளான முத்தியால்பேட்டை, களியனூர் , வள்ளுவபாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்குவது வழக்கம். 25 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

25 ஆண்டுகளாக தொடரும் நிகழ்வு

அவ்வகையில் 25 ஆண்டுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆர்.வி. ரஞ்சித் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனமான சைதை துரைசாமி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். 

25 லட்ச ரூபாய் காசோலை

மேலும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான களியனூர் பகுதியில் சமுதாயக் கட்டிடம் கட்ட ஆதிதிராவிட கிராமப்புற பொதுமக்கள் தன்னிறைவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை கிராம ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இவ்விழாவில், கலந்துகொண்ட சைதை துரைசாமி மாணவர்களுக்கான கல்வி அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பேசுகையில், ரஞ்சித் போன்று ஒரு நபரை இனி பார்க்க முடியாது. அரசு பள்ளிகளுக்கு உதவி செய்பவர்கள் மிகக் குறைவு, அந்த வகையில் எம்.ஜி.ஆர்., நடித்த கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்ட ரஞ்சித் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். அவரைப் போன்று நபர்களால் உதவி செய்ய முடியவில்லை என்றால் தான் வாழ முடியாது என தெரிவித்தார். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் நல திட்ட உதவிகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. 

சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தது என்ன?

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, தற்போது அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கும் நிலையில் , தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் ஆன்லைன் வசதி கொண்டு இலவசமாக பயிற்சி பெறலாம் எனவும், ஒருவர் அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நேரமே அவர்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதன் மூலம் மட்டுமே மிகச்சிறந்த பணியை ஓராண்டு அல்லது இரண்டு வருடங்களுக்குள் பெற்று மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனவே உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு நேர மேலாண்மையும் கடைபிடித்து போட்டி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய உறுப்பினர் பிரேமா ரஞ்சித் குமார், செய்தி ஆசிரியர் மருதுஅழகு முத்துராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன், வடிவுக்கரசி ஆறுமுகம் , பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.