Parandur Airport: பரந்தூர் விமான நிலைய திட்டம்: அரசு வேலை, ரூ.1 கோடி கடன், 5 சென்ட் நிலம்! சலுகைகள் உண்மையா?
Parandur airport latest news: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமையுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு, அரசு வேலை, மாதம்தோறும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோன்று சரக்கு விமானங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன.
இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய திட்ட மதிப்பு ?
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' (தொழில் வளர்ச்சி நிறுவனம்) நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நீலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய டவுன்ஷிப்கள்
பாதிக்கப்படும் குடும்பத்தினர் விமான நிலையம் அமைய உள்ள இடத்திற்கு அருகில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 4 டவுன்ஷிப் எனப்படும் புதிய நகரை தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் உருவாக்க உள்ளது.
அரசு கொடுக்கும் சலுகைகள் என்ன?
ஏற்கனவே, 1 சென்ட் முதல் 5 செண்ட் வரை வீடு வைத்துள்ள அனைவருக்கும், புதியதாக உருவாக்கப்படும் நகரில் வீடு கட்ட 5 சென்ட் நிலம் வழங்கப்பட உள்ளது. 5 முதல் 7 சென்ட் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கு 7 சென்ட் வழங்கப்பட உள்ளது. 7 சென்ட்க்கு அதிகமாக வீடு வைத்திருப்பவர்களுக்கு 10 சென்ட் வழங்கப்பட உள்ளது.
அதேபோன்று அரசு சார்பில் 400 சதுர அடியில் வீடு கட்டி தரப்படும். சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள விரும்புபவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
பாதிக்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அல்லது மாதம் 3000 ரூபாய் விதம் 20 ஆண்டுகளுக்கு நிதி உதவி அல்லது ஒரு முறை செட்டில்மெண்டாக 7.50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
போக்குவரத்து செலவு
வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து செலவாக ₹70,000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதேபோன்று மீள் குடியேற்ற உதவித்தொகையாக 70 ஆயிரம் ரூபாய் ஒருமுறை வழங்கப்பட உள்ளது.
சுய தொழில் செய்ய மானியம்
பாதிக்கப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுயதொழில் துங்குவதற்காக 30% மானத்துடன் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதனைப் போன்று மூன்று சதவீத வட்டியும் மானியமாக வழங்கப்படும்.
செலவை அரசே ஏற்படும்
வீட்டிற்கு பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் செலவை அரசை ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் என மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் ஒரு வணிக கடை கட்டிதரப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.





















