Kanchipuram: காஞ்சிபுரத்தை தலைகீழாக மாற்றப்போகும் அதிரடி திட்டங்கள்.. ரூ.672 கோடிக்கு பட்ஜெட்.. முக்கிய அறிவிப்புகள் என்னென்ன ?
Kanchipuram Budget: காஞ்சிபுரம் மாநகராட்சி பட்ஜெட் 672 கோடி ரூபாயில் 54 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 672 கோடி செலவினம் காண்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் இந்த ஆண்டு பட்ஜெட்டில், மொத்தம் 54 அறிவிப்புகளை மேயர் மகாலட்சுமி யுவராஜ் வெளியிட்டுள்ளார்
காஞ்சிபுரம் மாநகராட்சி பட்ஜெட் - Kanchipuram Municipality Budget
காஞ்சிபுரம் மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகரமைப்பு, சுகாதாரம், வருவாய், பொது மற்றும் பொறியல் என ஐந்து பிரிவுகள் உள்ளன. நடப்பாண்டில் மாநகராட்சிக்கு வருவாய் 673.2 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் செலவு 672.2 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் ஆகவும் 85 லட்சம் உபரியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை வழித்தடம்
காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர் கால்வாய் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது, நிதி கிடைத்து உடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார்டுக்கு 10 லட்சம் ரூபாய்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கும், 10 லட்ச ரூபாய் மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்.
குளங்கள் சீரமைப்பு
ஓ.பி குளம், வெள்ளை குளம் ஆகியவற்ற சீரமைத்து நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் மூன்று கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதாள சாக்கடை திட்டம்
ஓரிக்கை மற்றும் செவிலிமேடு பகுதிகளில் 400 கோடி ரூபாய்க்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 25, 26 ,28 மற்றும் 51 வார்டுகளுக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை டிபன் மற்றும் இரவில் பணியாற்றுபவர்களுக்கு டீ வழங்க நகராட்சி இயக்குனரிடம் அனுமதி பெறப்படும்.
நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் 75 லட்ச ரூபாயில் புதிதாக நாய் கருத்தடை சிகிச்சை மையம் கட்டப்படும்.
நகர்புற சுகாதாரம் மையம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக 19 நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் கட்டப்படும். இந்த திட்டத்திற்காக 4.75 கோடி ரூபாய் நிதி அரசிடமிருந்து கேட்டு பெறப்படும் என காஞ்சிபுரம் மேயர் அறிவித்துள்ளார்.
வாகன நிறுத்துமிடம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் அண்ணா அரங்கம் உள்ள இடத்தில் பன்னெடுக்கு வாகன நிறுத்துமிடம், அண்ணா அரங்கம் ஆகியவை 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன், புதிதாக கட்டப்படும். இதேபோல் 54 முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.





















