காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியலில் அதிரடி மாற்றம்! உங்கள் தொகுதியில் எத்தனை பேர்? முழு விவரம் இதோ!
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்தெந்த தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய நான்கு முக்கிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,01,198 ஆகப் பதிவாகியிருந்தது.
இருப்பினும், வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தகுதியற்ற வாக்காளர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்குக் குடிபெயர்ந்தவர்கள் என மொத்தம் 2,74,274 பெயர்கள் கள ஆய்விற்குப் பிறகு பட்டியலிலிருந்து முறைப்படி நீக்கப்பட்டன.
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்
இந்த நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 11,26,924 ஆகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட தகுதியுள்ள நபர்களைச் சேர்க்கும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது மாவட்டம் முழுவதும் புதிதாக 65,270 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை தற்போது மறுசீரமைக்கப்பட்டு, ஒரு தெளிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
தொகுதிவாரியாக வாக்காளர்கள் விவரம் :
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 133825 ஆண் வாக்காளர்களும், 142437 பெண் வாக்காளர்களும், 37 பிறர் வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 299 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை 8986 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் 358 பூத்துகள் இடம் பெற்றுள்ளன.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை ஒரு லட்சத்து 18,564 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 300 பெண் வாக்காளர்களும் மற்றும் 58 இதர வாக்காளர்களும் என இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 922 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 6898 வாக்காளர்கள் உத்திரமேரூர் தொகுதியில் அதிகரித்துள்ளனர். உத்திரமேரூர் தொகுதியில் 321 பூத்துகள் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 81,852 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 7 பெண் வாக்காளர்களும், 62 இதர வாக்காளர்களும் என மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 921 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூரை பொருத்தவரை புதியதாக 20065 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் 435 பூத்துகள் இடம் பெற்றுள்ளன.
ஆலந்தூர் தொகுதி பொறுத்த வரை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 839 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 173 பெண் வாக்காளர்கள் மற்றும் 40 இதர வாக்காளர்கள் உட்பட 2 லட்சத்து 96 ஆயிரத்து 52 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆலந்தூர் தொகுதியில் 28,781 வாக்காளர்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூர் தொகுதியில் 431 பூத்துகள் இடம் பெற்றுள்ளன.























