(Source: Poll of Polls)
135 லிட்டர் தண்ணி தான்! ஸ்மார்ட் மீட்டர் மூலம் குடிநீர் சிக்கலுக்கு தீர்வு? முழு விவரம்!
Kanchipuram Water Meter: காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி, காஞ்சிபுரத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தீவிரம்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சி - Kanchipuram Corporation
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில் காஞ்சிபுரம் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. விரைவில் காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் கூடுதல் பகுதிகள் இணைக்கப்பட்டு, பெரிய மாநகராட்சியாக உருவெடுக்க உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை, தற்போதைய சூழலில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் பிரச்சினை
காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை குடிநீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பல இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதாகவும், அவ்வப்போது பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு, 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் போதிய அளவு நீர் கிடைக்காததால், காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு சராசரியாக 90 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தற்போது நாள் ஒன்றுக்கு, 23 பில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குடிநீர் தேவை அதிகரிப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல் மற்றும் ஓரிக்கை ஆகிய இரு பாலாறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கு இந்த திட்டம் போதுமானதாக இருக்காது என்பது கணிப்பாக இருந்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் மாநகராட்சியாக உருவெடுக்கும்.
அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் தேவை 59 மில்லியன் லிட்டராக இருக்கும் என அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர்.எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு 318 கோடி ரூபாயில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மூன்று குடிநீர் சேகரிப்புக்குணர்கள், 5 ஆழ்துளை கிணறுகள், 6 நீர் உறிஞ்சு கிணறுகள், 431 கிலோமீட்டர் பகிர்மான குழாய்கள், 14 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
புதிய குடிநீர் இணைப்புகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை தற்போது குடியிருப்பு மற்றும் வணிக ரீதியாக 32,687 குடிநீர் இணைப்புகள். காஞ்சிபுரம் மாநகராட்சியில், புதிதாக 14,000 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. இவை 55 ஆயிரம் குடிநீர் இணைப்புகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 94 குடிநீர் தொட்டிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 14 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இதுபோக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பகுதிகளில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி
ஸ்மார்ட் மீட்டர் மூலம் ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு தல 135 லிட்டர் குடிநீர் முறையாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால், கூடுதல் குடிநீர் திருட்டு தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நவீன முறையில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படுவதால், பூமிக்கு அடியில் இருந்து குடிநீர் குழாய் வழியாக தண்ணீர் திருடுவதும் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போன்று தற்போது இருக்கும் நடைமுறையில், ஒரு சில இடங்களில் கழிவுநீருடன் குடிநீர், கலக்கக்கூடிய அவல நிலை ஏற்படுவதாகவும், இந்தக் குடிநீர் குழாய் மூலம் அவை தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டு பகுதியில் காஞ்சிபுரம் 3வது மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் கார்த்தி ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பணிகள் முறையாக நடைபெற வேண்டும், ஸ்மார்ட் மீட்டர்கள் முறையாக பொருத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.





















