காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கு ஆபத்து! நீர் வரத்து முடக்கம்: விவசாயிகள் அவசர கோரிக்கை!
"காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரி ஆக்கிரமிப்பில் இருப்பதால் ஏரி நிரம்பாமல், நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது"

"காஞ்சிபுரம் குநீர் ஆதாரம் செவிலிமேடு ஏரிக்கு ஆபத்து, நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்"
காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரி Sevilimedu Lake
காஞ்சிபுரம் புறநகர் வளர்ச்சிப் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செவிலிமேடு ஏரி, வடகிழக்குப் பருவமழை மற்றும் போந்த புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற ஏரிகள் நிரம்பிய நிலையிலும், வெறும் 40% நீர் இருப்பையே கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆவாரங்களாக பாலாற்றில் வெள்ளம் சென்றுகொண்டிருந்தாலும், பாலாற்றில் இருந்து வெறும் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் ?
இதற்குக் காரணம், பாலாற்றில் இருந்து வெள்ள நீரை ஏரிக்குத் திருப்பும் முகத்துவாரமான விப்பேடு மற்றும் கீழம்பி புறவழிச் சாலைப் பகுதியிலுள்ள சுமார் 10 கி.மீ. நீளமுள்ள கால்வாயில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள்தான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 10 முதல் 15 அடி அகலம் கொண்ட இந்தக் கால்வாய், ஆக்கிரமிப்பால் சில இடங்களில் சுருங்கி, நீர் தங்குதடையின்றி ஏரிக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கிறது. நீர்நிலை புறம்போக்கு இடங்களில் பலர் விவசாயம் செய்வது மற்றும் தனியார் இடங்களுக்கு செல்வதற்கான வழிகளாகப் பயன்படுத்துவதாலும் இந்தச் சிக்கல் நீடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஏரி நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நீர்வள ஆதாரத்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வரத்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை:
இது குறித்துப் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் லாரன்ஸ், "400 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் ஆதாரம் வழங்கும் இந்த ஏரியில் நீர் சேமிப்பு குறைந்தது எந்த வகையிலும் உதவாது. முகத்துவாரங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயைச் சீரமைத்தால் மட்டுமே ஏரி நிரம்பும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர்த்தேக்கமாக மாற்றும் திட்டம்:
மேலும், இது குறித்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்தபோது, செவிலிமேடு ஏரி மாநகராட்சியின் வளர்ச்சிப் பகுதியில் இருப்பதால், இதை விவசாயத்திற்கு மட்டும் அல்லாமல், பெரிய நீர் சேமிப்பு ஆதாரமாக (நீர்த்தேக்கமாக) மாற்றும் திட்டம் உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.





















