திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த முக்கூட்டத்திற்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தரம் வரவேற்புரையாற்றுகிறார்.


கூட்டணி கட்சிகள் பங்கேற்பு


காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் கி. வீரமணி, இரா. முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா பொன்.குமார் கருணாஸ், கு. செல்வப்பெருந்தகை, வைகோ, கே.எம்.காதர்மொய்தீன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன், அதியமான், தொல். திருமாவளவன், தி.வேல்முருகன், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், கே. பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், ஜி.எம்.தர் வாண்டையார், தமீமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




பரந்தூர் விமான நிலையம்


சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்று வட்டார 20 கிராமப்புறங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.‌ பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள், விலை நிலங்கள், நீர்நிலைகள், உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.




தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் 


உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம், கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு, பள்ளிப் புறக்கணிப்பு, நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 796வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


முதல்வரிடம் மனு 


தொடர்ந்து இரண்டு வருட காலமாக போராடிவரும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கும் உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடமும் இதுகுறித்து போராட்ட குழுவினர் கோரிக்கையை வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற, பேச்சுவார்த்தை அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் முதலமைச்சர் சந்திக்க அனுமதி வழங்கும் அதிகாரம் கிடையாது.




இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க, அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் அனுமதியை மீறி பேரணியாக சென்று மனு அளிக்க உள்ளதாக அறிவித்திருந்தனர். ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 


போலீசாரால் கைது


பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பினர் 17 பேர் அம்பேத்கர் சிலை முன்பு கற்பூரம் ஏற்றி பேரணியை துவக்கி 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில், காவல்துறையினர் அனுமதி இன்றி செல்ல முயன்ற நபர்களை கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். 


இதுகுறித்து போராட்ட குழுவினர் சுப்பிரமணி கூறுகையில், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் பல வழிகளில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று காஞ்சி வரும் முதல்வரை சந்திக்க முறையான அனுமதி கூறிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் பேரணியாக முதல்வரை சந்திக்க எங்கள் குழு நிர்வாகிகள் சென்றபோது, காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.