தி.மு.க. சமூக வலைதள Gen Z குழுவை சேர்ந்த செயற்பாட்டாளர் சரண் ஜெயராம் (ஆர்ஜே சரண்) மீது தமிழக வெற்றிக் கழகம் பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், எழும்பூர் நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க மறுத்து, சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து திமுக தங்களது GenZ அணி ஒன்றை தொடங்கியது. இந்த குழு சார்பாக மாவட்டம் தோறும் இளைஞர்களை திரட்டி திமுக ஆட்சியில் சாதனைகளை தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதே நேரம் தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இதனால் தவெக ஆதரவாளர்கள் மற்றும் திமுக GenZ அணிக்கு இடையில் சமூக வலைதளங்களில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரை கடுமையாக வசைபாடுவதும் , மீம்ஸ் வெளியிடுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது
GenZ செயற்பாட்டாளர் சரன் கைது
கடந்த ஜூன் மாதத்தில் த.வெ.க.வின் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், தனது சமூக வலைதளப் பதிவுகளை சரண் ஜெயராம் அனுமதியின்றி பயன்படுத்தி, பெண்களை அவமதிக்கும் வகையிலும் உருவகேலி செய்யும் விதமாக வீடியோக்கள் வெளியிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், தன்னை அவதூறாக சித்தரித்ததுடன், மிரட்டும் தொனியிலும் கருத்துகளை பதிவு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துதல், அவதூறு பரப்புதல் மற்றும் மிரட்டல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது சரண் ஜெயராம் சில நாட்கள் தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிலையில், தனிப்படை போலீசார் அவரை தாம்பரம் பகுதியில் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
சொந்த ஜாமின் வழங்கிய நீதிபதி
கைது செய்யப்பட்ட சரனை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைக்க அனுமதி கோரினர். ஆனால், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை முன்னேற்றத்தை பரிசீலித்த நீதிமன்றம் காவல் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அதற்குப் பதிலாக சரண் ஜெயராமை சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய அவர், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாகக் கூறியதுடன், சட்டப்படி எதிர்கொள்வேன் என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சரனுக்கு பிக்பாஸ் ஜூலி தனது ஆதரவை தெரிவித்து வந்த நிலையில் இன்று சரன் விடுவிக்கப்பட்டதை திமுக GenZ குழுவுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
