Ambedkar Statue: ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலைக்கு, சமூக நீதிக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


206 அடி உயர அம்பேத்கர் சிலை:


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள, 206 அடி உயர சிலையை இன்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் திறந்து வைக்க உள்ளார். ஸ்வராஜ் மைதானத்தில் அமைந்துள்ள அந்த சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள பகுதி ஸ்மிருதி வனம் என அழைக்கப்படுகிறது. அதில், 81 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. இத்திட்டம் ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக சுமார் 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயவாடாவில் உள்ள இந்த அம்பேத்கரின் சிலையானது, நாட்டின் உயரமான மதச்சார்பற்ற தலைவரின் சிலையாகவும் கருதப்படுகிறது. உலகின் இரண்டாவது உயரமான அம்பேத்கர் சிலை, அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் உயரமான 50 சிலைகளுக்கான பட்டியலிலும் இது இடம்பெற்றுள்ளது. 






உள்நாட்டிலேயே உருவான அம்பேத்கர் சிலை:


உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமையை பெறும் இந்த சிலை, முழுவதுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சிலையின் வடிவமைப்பு தொடங்கி  கட்டுமானம், மூலப்பொருட்கள் பெறுவது மற்றும் தோற்றத்தை இறுதி செய்வது வரையிலான 100 சதவிகித பணிகளும் இந்தியாவிலேயே நடைபெற்றுள்ளன.  ஐதராபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஏஜென்சியான M/s KPC ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் கட்டுமான பணியை செய்துள்ளது. அதே நேரத்தில் திட்டத்தின் வடிவமைப்பு நொய்டாவில் உள்ள M/s டிசைன் அசோசியேட்ஸால் செய்யப்பட்டுள்ளது. சிலையை நிறுவுவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வராஜ் மைதானத்தை மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இது அனைவராலும் அணுகக்கூடியதாக,  நகரின் மையத்தில் உள்ளது. இதனால், இந்த சிலை இருக்கும் பகுதி மிகப்பெரிய சுற்றுலா தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்மிருதி வனத்தில் உள்ள வசதிகள்:


சிலை இருக்கும் பகுதி முழுமையாக பசுமையானதாக மாற்றப்பட்டுள்ளதோடு, பீடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் முன்புறத்தில் ஆறு நீர்நிலைகள், மையத்தில் இசை நீரூற்று, பீடத்திற்கான 3 பக்கங்களில் புற நீர்நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் காலை மற்றும் மாலையில் நடைபயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு, முழுப் பகுதியும் அழகிய பசுமையான நிலப்பரப்பாக மாற்றப்படுகிறது. சிலைக்கு கீழே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் எல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும். 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் அமைந்துள்ளன.