பெண்கள் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் ஏன் சேர்க்கப்படுவதில்லை என்பது தொடர்பான வாதம் கடந்த 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முதல் எழ தொடங்கியது. அப்போது அந்த வழக்கில் பெண்களுக்கு ராணுவத்தில் முழுமையான பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருந்த என்டிஏ தேர்வில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக குஷ் கால்ரா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் பெண் என்பதால் மட்டும் ஒருவரை இந்த தேர்வு எழுதக் கூடாது என்று சொல்வது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.கே.பாட்டி ஆஜராகி இருந்தார். அவர், "ராணுவத்தில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உயர்மட்ட அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பெண்களை அனுமதிப்பதற்கு முழு ஆதரவாக உள்ளது. எனினும் இந்த உத்தரவை அமல்படுத்த சில காலங்கள் எடுக்கும் என்பதால் இந்தாண்டு தேர்வில் தற்போது இருக்கும் நடைமுறையே கடைபிடிக்கப்படும் விரைவில் இந்த தேர்வை பெண்களும் எழுத அனுமதிக்கப்படுவார்கள்"எனத் தெரிவித்தார். 




இதை கேட்ட நீதிபதிகள்,"மத்திய அரசு மற்றும் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இந்த முடிவை எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் மிகவும் முக்கியமான ராணுவப்படை பல நல்ல வேலைகளை செய்துவந்தாலும் பெண்களுக்கு சம உரிமை அளிப்பதில் இன்னும் பின்தங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் வேகமாக நல்ல முடிவு எடுக்க வேண்டும்" எனக் கூறினர். அத்துடன் மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் நிலைப்பாடை வரும் 22ஆம் தேதி பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


தேசிய ராணுவ அகாடமியில் சேர்வதற்காக 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு என்டிஏ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்தத் தேர்வை மத்திய அரசின் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி பெண்களுக்கு ராணுவத்தில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தது. அந்த உத்தரவிற்கு பிறகு பெண்கள் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: மியா கலீபா படத்தை டாட்டூவாகப் போட்டுக் கொண்ட டெல்லி இளைஞர்.. மியாவின் பதில் என்ன தெரியுமா?