இந்தியாவை பொறுத்தவரையில், அரசியலில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியா மட்டும் இன்றி பல நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. ஆனால், இந்தியாவில் அவர்கள் மிகக் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 234 எம்எல்ஏக்களில் 12 பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.


அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள்:


அதேபோல, மக்களவையில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 39 எம்பிக்களில் மூவர் மட்டுமே பெண்கள். இந்த நிலையை மாற்றி, பெண்களை அதிகார மையத்திற்கள் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது.


இதன் மூலம், மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டவிடும். 


கடந்த 2010ஆம் ஆண்டு, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் மக்களவையில் கடும் எதிர்ப்பின் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகள் ஆன பிறகும், மக்களவையில் இன்றைய தேதி வரையில், இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.


பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா?


இந்த நிலையில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்த கேள்விக்கு நேற்று பதில் அளித்து பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.


கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், "பாலின நீதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையின் அடிப்படையில் இந்தப் பிரச்னையை கவனமாக பரிசீலிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே, பெண்கள் அரசியலில் முக்கிய பங்கை ஆற்றி வருகின்றனர். குறிப்பாக, சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பெருந்திரளான பங்கேற்பு, ஆங்கிலேயர்களை திக்குமுக்காட வைத்தது. 


கடந்த 1931ஆம் ஆண்டே, பெண்களின் நிலை குறித்து பிரிட்டன் பிரதமருக்கு பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் கூட்டாக அதிகாரப்பூர்வ குறிப்பு ஒன்றை சமர்ப்பித்தனர். பஞ்சாயத்து மட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கடந்த 1988 ஆம் ஆண்டு பெண்களுக்கான தேசிய திட்டம்  பரிந்துரைத்தது.


இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அரசியலமைப்பில் 73 மற்றும் 74ஆவது திருத்தங்களை மேற்கொண்டு, பஞ்சாயத்துகளிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த 33 சதவிகித இடங்களில் மூன்றில் ஒரு பங்கு, பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.