அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மேற்கொண்டுள்ளார்.  இதுவரை 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1800க்கும் மேற்பட்டவர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில வாரங்களில் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகரிக்கும் என்று அரசுத் தரப்பு கூறியுள்ளது.


இந்நிலையில் அசாம் முதல்வரின் நடவடிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் அசாதுதீன் ஓவைசி. ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரான அவர், பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் அந்த கட்சியின் முதல்வர் எடுக்கும் நடவடிக்கை முஸ்லீம் விரோத நடவடிக்கையாகத் தான் இருக்கும். குழந்தை திருமணம் தடுப்பு என்ற பெயரில் முஸ்லீம்களே அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் மதகுருமார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகையால் முதல்வரின் நடவடிக்கை திட்டமிட்ட மத விரோத நடவடிக்கை மட்டுமே. இதில் பெரிய நல்லெண்ணம் ஏதுமில்லை. இப்போது ஆயிரக்கணக்கான ஆண்கள் குழந்தை திருமண குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படியென்றால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களுக்கு இந்த அரசு என்ன நிவாரணம் அளிக்கப்போகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி உறுதி செய்ய போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டங்களையும்,  நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. குறிப்பாக வடமாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்னதான் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் மக்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதனிடையே அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நேற்றைய தினம் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார். 


2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் 20-24 வயதுடைய பெண்கள் சட்டப்பூர்வமாக 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. அசாமில் 31.8% ஆக குழந்தை திருமணத்தில் எண்ணிக்கை உள்ளது. மேலும்  15-19 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 11.7% பேர் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இது முந்தைய ஆண்டுகளில் நடந்த கணக்கெடுப்பில் வெளிப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும். இதில் பெரும்பாலான குழந்தை திருமண வழக்குகள்  துப்ரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த அசாம் அரசு, அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கடந்த ஜனவரி 23 ஆம் தேதி  குழந்தைத் திருமணங்களை ஒடுக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதனிடையே முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தற்போது கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1800க்கும் மேற்பட்டவர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனவும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு எதிராக அசாம் போலீசார் வேடிக்கைப் பார்க்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். 


அதேசமயம் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை திருமணம் செய்து, அவர்களை தாயாகுமாறு கட்டாயப்படுத்துபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்களை குழந்தை திருமண தடை அதிகாரிகளாக நியமிக்க மாநில அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.