கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுவரும் நிலையில், பீகாரில் புதிதாக வெண்பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவும் மியூக்கர்மைக்கோசிஸ் எனப்படும் கரும்பூஞ்சையால் உண்டாகும் அபாயத்தை விளைவிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் நுரையீரலுக்குள் இது ஊடுருவுகிறது. இதுவரை பீகாரில் கொரோனா நோயாளிகளிடையே வெண்பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனாலும் வெண்பூஞ்சை எனப்படும் கேண்டிடா மற்றும் அஸ்பெர்கில்லஸ் ஆனது, இனி நுரையீரல்களுக்குள் ஊடுருவது புதிய சவாலாக உருவெடுக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் மருத்துவர் எஸ்.என்.சிங் இது பற்றிக் கூறுகையில், நான்கு நோயாளிகளிடம் இந்த வெண்பூஞ்சை தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது; அவர்களில் இரண்டு பேர் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் என்றார்.


முன்னதாக, நாட்டில் பரவியுள்ள கரும்பூஞ்சைத் தொற்றால் கடந்த புதன்வரை 126 பேர் உயிரிழந்தனர் என்று மருத்துவத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 90 பேர். அதையடுத்து அரியானா மாநிலத்தில் 14 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 8 பேரும் கரும்பூஞ்சை தாக்கத்தால் இறந்துபோயுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு பேரும் சத்திஸ்கர், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், பீகார், அசாம், ஒதிசா, கோவா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.


நாடளவில் 5,500 பேர் கரும்பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. டெல்லி, டெலங்கானா, ஒதிசா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இதற்கான மருந்துக்கு கடுமையாக தட்டுப்பாடு நிலவுகிறது. பல மாநிலங்களில் தனியார் கடைகளில் ஆம்போடெரிசின் பி மருந்து இருப்பு தீர்ந்துவிட்டதாக அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.