மெசேஜின் என்கிரிப்ஷனை (தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம்) உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

வழக்கின் பின்னணி என்ன?

விதி 4(2) தகவல் தொழில்நுட்ப சட்டம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்), 2021க்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் (தற்போது மெட்டா என அழைக்கப்படுகிறது) சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

விதி 4(2)இன் கீழ், நீதிமன்றமோ அல்லது சம்பந்தப்பட்ட அரசு துறையோ உத்தரவிடும்பட்சத்தில், குறிப்பிட்ட தகவலை சமூக ஊடகத்தில் முதன்முதலில் அனுப்பியது யார் என்பதை கண்டறிந்து தெரியப்படுத்த வேண்டும். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

Continues below advertisement

இன்றைய விசாரணையில் மெட்டா நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் தேஜஸ் கரியா ஆஜரானார்.  அப்போது வாதிட்ட கரியா, "தனியுரிமை உறுதி செய்யப்படுவதாலும், அதில் பரிமாறப்படும் தகவல்கள் என்கிரிப்ட் (மெசேஜை மூன்றாம் தரப்பு பார்க்க முடியாது) செய்யப்பட்டதால்தான் மக்கள் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒரு தளமாக, நாங்கள் சொல்கிறோம், என்கிரிப்ட் வசதியை உடைக்கச் சொன்னால், வாட்ஸ்அப் வெளியேறிவிடும்.

நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வாதம்:

மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் என குறிப்பிட்ட சட்ட விதி சொல்கிறது. இது உலகில் வேறு எங்கும் இல்லாத தேவையாகும். நாங்கள் முழுமையான தகவல்களை வைத்திருக்க வேண்டும். எந்த மெசேஜை கேட்பார்கள் என தெரியாது. எனவே, மில்லியன் கணக்கான மெசேஜ்களை பல ஆண்டுகளாக சேகரித்து வைத்திருக்க வேண்டும்

எந்த விதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதோ அந்த விதி முதலில் இருந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தை விட வரம்பு தாண்டுகிறது. முதலில் இருந்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மெசேஜின் என்கிரிப்ஷனை உடைக்க வேண்டியதில்லை" என்றார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், உலகில் வேறு எங்கும் இம்மாதிரியான சட்டம் இல்லையா என கேள்வி எழுப்பினர். "இதுபோன்ற வழக்கு உலகில் எங்காவது தொடரப்பட்டதா? உலகில் எங்கும் தகவல்களைப் பகிரும்படி உங்களிடம் கேட்கப்படவில்லையா? தென் அமெரிக்காவில் கூடவா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "பிரேசிலில் கூட இதுபோன்ற சட்டம் இல்லை" என வழக்கறிஞர் கரியா பதில் அளித்தார்.

மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கீர்த்திமான் சிங் வாதிடுகையில், "சமூக ஊடகங்களில் நடக்கக்கூடிய விஷயங்கள் மக்களுக்குத் தெரியும். மேலும், அந்தச் செய்தியை உருவாக்கியவரைக் கண்டுபிடிப்பதே விதியின் பின்னணியில் உள்ள யோசனை.

இறுதியில், செய்திகளைக் கண்டறிய சில வழிமுறைகள் இருக்க வேண்டும். ஏனெனில், அது காலத்தின் தேவையாகும். வாட்ஸ்அப்பிடம் அமெரிக்க நாடாளுமன்றம் கடினமான கேள்விகளை கேட்டது" என்றார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.