மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். சமீபத்தில், தெலங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க அம்மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை வாங்க மூன்று பேர் பணம் கொடுக்க முயற்சித்ததாகவும் அவர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்திருந்தது.


எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க பாஜக முயற்சித்ததற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், அதிபர் தேர்தல் முறையை நோக்கி செல்வதில் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என நீதித்துறைக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் குரலுக்கு நீதித்துறை செவிசாய்க்க வேண்டும் என்றும், நாட்டில் கூட்டாட்சி மற்றும் ஜனநாயக கட்டமைப்புகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


 






இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நீதித்துறை மக்களை பேரழிவிலிருந்தும், அநீதியிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். மக்களின் அழுகையை கேட்க வேண்டும். இப்போது மக்கள் கதவுகளுக்குப் பின்னால் அழுகிறார்கள். நீதித்துறையை சார்ந்த அனைவரிடமும் எதிர்காலத் தலைவர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். 


தயவு செய்து கூட்டாட்சி அமைப்பு எஞ்சியிருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்டு ஒரு பிரிவினர், ஜனநாயகத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். அதிபர் தேர்தல் முறையை நோக்கி நாடு சென்றுவிடும். பிறகு, ஜனநாயகம் எங்கு இருக்கும்? அதை காப்பாற்றுங்கள்?" என்றார்.


மேற்கு வங்க தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் இப்படி பேசியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த குறுகிய காலத்தில் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததற்காக தற்போதைய தலைமை நீதிபதி (CJI) லலித்துக்கு தனது பாராட்டுக்களை மம்தா தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய தலைமை நீதிபதி [இந்தியாவின்] லலித்தை நான் வாழ்த்த வேண்டும். அவருக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே பதவிகாலம் இருந்தது. எனக்கு தெரிந்த வரை, அவர் 8 ஆம் தேதி [நவம்பர்] ஓய்வு பெறுகிறார். இந்த இரண்டு மாதங்களில் நீதித்துறை என்றால் என்ன என்பதை பார்த்தோம். நீதித்துறையின் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளனர்" என்றார்.


இருப்பினும், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என நான் சொல்லவில்லை என மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். ஆனால், நிலைமை மோசமாக இருந்து மிக மோசமாகி வருகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.