பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில், பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். எனினும் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பி விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சை விளம்பரம்: பின்னணி என்ன?
பதஞ்சலி நிறுவனத்தின் சில பொருட்கள், சில நோய்களை குணமாக்கும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதை எதிர்த்து, மருந்துகள் குறித்துத் தவறாக விளம்பரப் படுத்தப்படுவதாகவும், ஆங்கில மருத்துவம் குறித்து சில தவறான தகவல்களை ப்பரப்புவதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது என பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து நோய்களைக் குணப்படுத்தும் வகையிலான விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகின.
இதையடுத்து, விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டதாகக் கூறி, பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பதஞ்சலி நிர்வாகத்திடம் இருந்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மார்ச் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்ட வழக்கை விசாரிக்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசுக்கு பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமின்றி, இருவரும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
பதில் அளிக்க கடைசி வாய்ப்பு
கடந்த முறை விசாரணையின்படி, அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு, பாபா ராம்தேவ் பெற்றுக்கொண்டார். ஆனாலும் ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்பீர் சிங் கூறும்போது, பதில் தயாராக உள்ளதாகவும் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிமன்றம், ராம்தேவ் பதில் அளிக்க கடைசி வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்தது.
நீதிபதி ஹீமா கோலி கூறும்போது, ’’உங்களின் மன்னிப்பு வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கிறது. சில நேரங்களில் சில விஷயங்கள் சரியான வகையில் முடிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.