தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. நாட்டின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.
நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு: நூற்றுக்கணக்கான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய 200-க்கு மேற்பட்டோர் பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பான தகவல் வெளியானதில் இருந்தே பல்வேறு அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள், மாநில அரசுகள், கேரளாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு நேற்று காலையிலேயே தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பியது. மேலும், கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதி உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கேரளாவுக்கு உதவி செய்த தமிழ்நாடு: இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவனந்தபுரம் சென்று, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ரூ. 5 கோடி காசோலையை தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கினார்.
நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் நேற்று இரவு கேரளா விரைந்தார். "நிலைமையை மத்திய அரசு உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகிறது. நிலைமையை பிரதமர் கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட என்னை அனுப்பியுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் இரு கட்டுப்பாட்டு அறைகளும் 24x7 நிலைமையை கண்காணித்து, மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன" என ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணியில் அந்த மாநில பேரிடர் குழுவினருடன் ராணுவம் மற்றும் விமானப்படையினரும் இணைந்துள்ளனர். தமிழ்நாடு அரசும் தங்களது மாநில பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பி வைத்துள்ளது. நேற்று காலை முதல் அங்கு பல இடங்களில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர். பல நேரங்களில் தொடர்ந்து மோசமாக மழை பெய்ததால் ஹெலிகாப்டரால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.