வயநாடு நிலச்சரிவின் மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள நிலச்சரிவு மீட்பு பணிகள் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். நிலச்சரிவில் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. அட்டமலை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவால் உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு, திரிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவக் குழுவினர் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மீட்புக் குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி 191 பேரை காணவில்லை. சூரல் மலைக்கு 17 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என விளக்கம் அளித்தார்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 2வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளாவுக்கு நிதியுதவி வழங்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலும் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஒப்படைத்தார்.
இதனிடையே நடிகர் விக்ரம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்காக ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.