பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் தொடர்பான வீடியோக்களே அதிகம் பகிரப்படும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சமூக வலைதளப்பக்கத்தில் அண்மையில் ஒரு ஜாலியான ரொமாண்டிக்கான வீடியோ பகிரப்பட்டிருந்தது.
ஒரு ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்திருக்கும் டெண்டுல்கர் தன் முன்னே இருக்கும் ப்ளேட்டை எடுக்கிறார் அதில், “You never know who you'll meet over a slice.” என எழுதப்பட்டிருக்கிறது. வீடியோவின் மறுபக்கத்தில் வேறு யாருமல்ல, அஞ்சலி டெண்டுல்கர் சிரித்தபடியே நமக்கு காட்சி தருகிறார். அவரது ப்ளேட்டில் ”Love at first bite” என எழுதியிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது...
முன்னதாக, ரஞ்சிக் கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் ரஞ்சி சதத்தை எடுத்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவரது தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் அர்ஜூனுக்கு அந்தச் சதம் எளிமையாக அமைந்துவிடவில்லை என்றும் தான் அர்ஜூனை சதத்தை இலக்காகக் கொண்டு விளையாடச் சொன்னதாகவும் கூறியுள்ளார். மேலும் அர்ஜூனுக்கு குழந்தைப் பருவம் சாதாரணமாக இருக்கவில்லை என்றும் ஒரு கிரிக்கெட் வீரரின் மகனாக் இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். தந்தையை போலவே கிரிக்கெட் வீரராக வலம் வர ஆசைப்படும் இவருக்கு ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், இதுவரை ஒரு ஐ.பி.எல். போட்டிகளில் கூட அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்கியது கிடையாது.
இந்த நிலையில், 23 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி போட்டியில் கோவா அணிக்காக தற்போது அறிமுகமாகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில் கோவா அணிக்காக களமிறங்கியுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி அபாரமாக சதம் அடித்து விளாசியுள்ளார்
இந்த சதத்தின் மூலம் தனது தந்தையின் சாதனையை அர்ஜுன் டெண்டுல்கர் சமன் செய்துள்ளார். அதாவது, கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி மும்பை – குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய அறிமுக போட்டியிலே சதமடித்து அசத்தினார்.
தற்போது, 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டிசம்பர் மாதத்தில் தந்தையை போலவே தான் அறிமுகமான ரஞ்சி போட்டியிலும் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சதமடித்து அசத்தியுள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் கோவா அணியின் தொடக்க வீரர்கள் சுமிரன் அமோங்கர் 9 ரன்களிலும், சுனில் தேசாய் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க பிரபுதேசாய் – கௌதங்கர் ஜோடி பொறுப்புடன் ஆடியது.
கௌதங்கர் 59 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சித்தேஷ் லெட் 17 ரன்களிலும், ஏக்நாத் கேர்கர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர் பிரபுதேசாய்க்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். பிரபு தேசாய் நிதானமாக ஆட அர்ஜுன் டெண்டுல்கர் அவ்வப்போது அதிரடி காட்டினார். பிரபுதேசாய் சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து அர்ஜுன் டெண்டுல்கரும் தன்னுடைய அறிமுகப் போட்டியிலே சதம் அடித்து விளாசினார்.
தற்போது வரை கோவா அணி 140 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்துள்ளது. பிரபுதேசாய் 172 ரன்களுடனும், அர்ஜுன் டெண்டுல்கர் 112 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.