ஒடிசாவின் சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு அரிய வகை புலி தென்பட்டுள்ளது. வெளியான வீடியோவில், ஒரு கரும்புலி நடமாடுவதை காணலாம். சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிடப்பட்ட 15 வினாடி கிளிப்பில் மரத்தின் மீது அந்த கருப்பு நிற புலி ஏற முயல்கிறது.
இந்த கிளிப்பை ட்விட்டரில் பகிர்ந்த இந்திய வனத்துறை அலுவலர் சுசாந்தா நந்தா, "சர்வதேச புலிகள் தினத்தில் ஒரு அரிய வகை புலியின் சுவாரசியமான கிளிப்பைப் பகிர்கிறேன்" என பதிவிட்டுள்ளார். அந்த புலியின் நிறம் பெரும்பாலும் கருப்பாக இருந்தாலும் அங்கும் இங்குமாய் தோலில் வெள்ளை அல்லது தங்க நிற இருண்ட பட்டை வடிவத்தை பார்க்கலாம்.
இந்த அரிய வகை புலி, சிமிலிபாலில் வைக்கப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. ட்விட்டரில் எப்போதும் சுவாரசியமான வனவிலங்கு வீடியோக்களைப் பகிரும் சுசாந்தா நந்தா, கரும்புலிகளுக்கு தனித்துவமான மரபணு இருப்பதாகவும், புலிகள் காப்பகத்தில் அவற்றின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அரிய வகை புலிகள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கு அதன் மரபணு பிறழ்வே காரணம். வங்க புலிகளின் குறிப்பிட்ட மரபணுவில் பிறழ்வு ஏற்பட்டு இம்மாதிரியான அரிய வகை புலிகள் பிறக்கின்றன. இந்த குறிப்பிட்ட மரபணுவில் உள்ள பல்வேறு பிறழ்வுகள் சீட்டாக்கள் உள்பட மற்ற வகை பூனைகளின் நிறத்தில் ஒரே மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
சிம்லிபால் புலி ஒரு சிறிய எண்ணிக்கையிலிருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். இந்த புலிகள் கிழக்கு இந்தியாவில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாழ்கின்றன. அவற்றிற்கும் மற்ற புலிகளுக்கும் இடையேயான தொடர்பு அசாதாரணமானது. இத்தகைய புலிகள்தான், குறுகிய காலத்தில் கூட அழிவுக்கு ஆளாகிறது.
அரிய வகை புலியின் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியானவுடன் வைரலாகியுள்ளது. "இதை நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். இது என்ன பூனை இனம் என எனக்கு தெரியவில்லை" என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு இந்திய வனத்துறை அலுவலரான பர்வீன் கஸ்வீன், இந்த கிளிப்பை ரீட்வீட் செய்து, இந்த அரிய வகை உயிரினம் பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். "அரிய வகை புலிகள் முதன்முதலில் 2007 இல் சிம்லிபால் புலிகள் காப்பகத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டன," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்