பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவமனை வார்டுகள் தூய்மையற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஃபரித்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் கேமராமேன்களுடன் சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, உயர் அலுவலர் ஒருவரை நோயாளிகளுக்கான படுக்கையில் படுக்கச் சொல்லி நாடகமாட முயற்சித்துள்ளார்.
ஃபரித்கோட்டில் உள்ள பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ் பகதூர், அமைச்சரின் உத்தரவைப் பின்பற்றி, நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்தார். இந்த சம்பவத்தை சுற்றியுள்ளவர்கள் கேமராவில் பதிவு செய்தனர்.
அப்போது, "எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது, எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது" என அமைச்சர் ஜூரமஜ்ரா படுக்கையில் படுத்திருந்த துணை வேந்தரிடம் பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நேரத்தில், ஒருவர் மெத்தையை உயர்த்தி அதன் மோசமான நிலையை சுட்டிக்காட்டுகிறார். அப்போது, மருந்து கடையை காட்டும்படி அமைச்சர் திசை மாற்றுகிறார்.
இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பர்கத் சிங் ட்விட்டரில், "ஆம் ஆத்மி கட்சியின் மலிவான நாடகங்கள் நிறுத்தப்படுவதில்லை.
இன்று பாபா ஃபரித் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜ் பகதூர் சிங், சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ராவால் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர். இந்த வகையான நடத்தை நமது மருத்துவ ஊழியர்களின் மன உறுதியைக் குலைக்கும்" என பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, அமைச்சர் சேத்தன் சிங், மருத்துவமனையில் நோயாளிகளிடம் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மே மாதம், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அப்போதைய சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
இருப்பினும், அரசு மருத்துவமனைகள் மோசமான நிலையில் இருப்பது சுகாதார உள்கட்டமைப்புகளில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்யாமல் செய்தியாளர்களை அமைச்சர் அழைத்து சென்று பிரச்னையை மறைக்க முற்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்