இந்து கடை உரிமையாளர் ஒருவர் தனது கடையை முஸ்லீம் ஒருவருக்கு வாடகைக்கு விட்டதோடு, அங்கு உரிமையாளரின் இந்து பெயரிலேயே கடையை நடத்த அனுமதித்ததை எதிர்த்து பஜ்ரங் தள் உறுப்பினர்கள் பிரச்சனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்து பெயர் கொண்ட ஜுஸ் கடை


டெல்லியின் நஜாப்கரில் ஜூஸ் கடை வைத்திருக்கும் ராஜு, தனது கடையான ‘ராஜூ ஜூஸ் அண்ட் ஷேக்ஸ்’ என்ற கடையை அதே பெயரிலேயே நடத்துவதற்காக முகமது ஜைத் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதனை அறிந்த பஜ்ரங் தள் இந்துத்துவ உறுப்பினர்கள் காவி துண்டு அணிந்து சென்று இந்து பெயர் கொண்ட கடையை முஸ்லிம் ஒருவர் எப்படி நடத்த முடியும் என்று கடையின் உரிமையாளரிடம் சண்டையிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியாகி உள்ளது.



பெயரை மாற்ற வேண்டும்


முகமது ஜைத் என்பவர் ராஜு என்னும் கடையை நடத்தி வருவதைக் கண்ட அவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடையின் பெயரை இந்து பெயருக்கு பதிலாக முஸ்லிம் பெயராக மாற்றுமாறு உரிமையாளர் ராஜுவிடம் கூறியுள்ளனர். "கடை நடத்துபவர் முஸ்லீமாக இருந்தால், பெயர் பலகையில் ஏன் இந்து பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது?" என்று அங்கிருப்பவர்களை காவி துண்டு அணிந்தவர்கள் கேட்கிறார்கள். இதற்குப் பதிலளித்த கடை உரிமையாளர், வாடகைக்கு விடுவதற்கு முன்பே பெயர் இருந்தது என்றார். அதற்கு, "பேமென்ட் செய்யும் பார்கோடு மட்டும் அவரது பெயரைக் காட்டுகிறது. கடைக்கு ஏன் அதை நடத்துபவரின் பெயரை வைக்கக்கூடாது?" என்றனர்.


தொடர்புடைய செய்திகள்: Karnataka CM: 20ஆம் தேதி பதவியேற்கும் சித்தராமையா.. துணை முதல்வராக சிவக்குமார்: கை மாறுகிறதா முக்கிய இலாக்காக்கள்!


லவ் ஜிகாத் போல தூக் ஜிஹாத் 


அதற்கு அந்த உரிமையாளர், “பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் என்ன பிரச்சனை..?" என்று கேட்க, கடையை நடத்துபவரின் பெயரையே வைக்க வேண்டும் என்று வந்தவர்கள் அடிதடியில் இறங்கினர். "இந்து பெயர் வைக்காதீர்கள். குழப்பத்தை உருவாக்காதீர்கள். தூக் ஜிஹாத் செய்யாதீர்கள்," என்று அவர்கள் குற்றம் சாட்டினர். ‘லவ் ஜிஹாத்’ போன்று ‘தூக் ஜிஹாத்’ என்பது முஸ்லீம் சமூகம் பொருளாதார ரீதியாக வளர்வதற்கு இந்துக்களை பயன்படுத்துதல் என்ற அடிப்படையில் இந்துத்துவவாதிகள் உருவாக்கிய கோட்பாட்டின் பெயராகும்.






இந்துக்கள் போட்டால் ஜுஸ் வராதா?


"முஸ்லீம் ஒருவர் ஜூஸ் பரிமாறினால், கடை பலகையில் முஸ்லீம் பெயரை எழுதுங்கள். ஜைத் கடை வைத்தால், ஜைத் பெயரை எழுதுங்கள்," என்று அவர்கள் கூறினார்கள். பிரச்சனைக்கு பிறகு உரிமையாளர், பெயர் மாற்றம் செய்யப் போவதாக பதிலளித்தார். "அவர் கடை நடத்தி வருகிறார். நான் அவரை காலி செய்தால், அது அவரது வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனக்கும் அது இழப்புதான், நான் அவரை பெயர் மாற்ற சொல்கிறேன்," என்று உரிமையாளர் கூறினார். பின்னர் பஜ்ரங் தள் ஆட்கள் அதை ஒரு இந்துவுக்கு வாடகைக்கு விடுமாறு உரிமையாளரிடம் கேட்டனர்.