கர்நாடக அரசியலில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பட்டீல் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.


கர்நாடக சட்டமன்றம் இன்று தொடங்கி இன்னும்10 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. முதல்வர் பசவய்யா பொம்மை இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். இந்நிலையில்தான் பாஜக முன்னாள் அமைச்சரும் காக்வாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஸ்ரீமந்த் பாட்டீல் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார். நான் காங்கிரஸில் இருந்து விலகியபோது பாஜக என்னிடம் எவ்வளவும் பணம் வேண்டும் எனக் கேட்டது. ஆனால் நான் எனக்கு நல்ல பதவி கேட்டேன். மக்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதற்காகவே நல்ல பதவி கேட்டேன் என்று கூறினார். 


காக்வாட் தாலுகாவுகு உட்பட்ட அய்னாபூரில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்த நிகழ்ச்சியில் தான் அவர் இவ்வாறு பேசினார்.


கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதல்வராகப் பதவியேற்ற பின்னர் பாட்டீலுக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டது. இது குறித்து அதிருப்தியில் இருந்த பாட்டீல், நான் எனது தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் இடம் கோரினேன். கடந்த முறை எனக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. இந்த முறை அப்படியொரு வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்புகிறேன் எனக் கூறியிருந்தார்.


இன்று கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் அமைச்சராக வேண்டும் என்று விரக்தியில் எல்லா வழிகளிலும் முயற்சித்து வரும் பாட்டீல், இப்படி ஒரு சர்ச்சைக் கருத்தைக் கூறி அதனை பகடைக்காயாகப் பயன்படுத்தி மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறத் துடிக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.


பாட்டீல் கடந்த 1999-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் எஸ்.எம்.கிருஷ்ணா முன்னிலையில் இணைந்தார். 2004-ஆம் ஆண்டில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது அவர் காங்கிரஸிருந்து வெளியேறு மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியில் இணைந்தார். ஆனால் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தார். பின்னர் 2018-ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸில் இணந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்த ஆண்டே விலகினார். 2021 காக்வாட் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 


இப்போது அமைச்சரவையில் இடம்பெற வேண்டி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சி மாறுவது ஸ்ரீமந்த் பட்டீலுக்கு புதிதல்ல. அரசியலில் நிலையற்ற தன்மையைக் கொண்ட அவரின் இப்போதைய கருத்து ஆளும் பாஜகவுக்கு ஒருவிதத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கருத்தை கூறிய பின்பு ஒருநாள் கழித்து, தானாகவே இஷ்டப்பட்டு பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார். இன்னும் 10 நாளுக்கு சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் பாட்டீலின் எண்ணாம் ஈடேறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.