Green Card: அமெரிக்காவின் குடியுரிமைக்கு விண்ணபிக்க ட்ரம்ப் தலைமையிலான அரசு புது நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

க்ரீன் கார்ட் திட்டத்தில் மாற்றம்

தற்காலிக விசாக்கள் மூலம் அமெரிக்காவின் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் நிரந்தரக் குடியுரிமை அல்லது க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறையை அடிப்படையாக மாற்றும் ஒரு புதிய கொள்கைத் திட்டத்தை ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி, பெரும்பாலானோர் அமெரிக்காவிற்குள் இருந்தவாறே விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுநாள் வரை மாணவர், சுற்றுலா அல்லது பணி விசாக்களில் ஏற்கனவே அமெரிக்காவில் வசித்து வந்த பல வெளிநாட்டினர், நாட்டை விட்டு வெளியேறாமலேயே க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடிந்தது. தகுதி நிலை சரிசெய்தல் (Adjustment of Status - AOS) என்று அறியப்பட்ட இந்த செயல்முறை, பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததுடன், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருந்தது.

புதிய நடைமுறைகள் என்ன?

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ள புதிய கொள்கையானது, AOS-ஐ ஒரு அசாதாரண நிவாரண வடிவம் என மாற்றுகிறது. அதாவது இதை குறிப்பிட்ட சில விதிவிலக்கான நேர்வுகளில் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்பதாகும். மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் உட்பட, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டிருந்த, தற்காலிக விசாவில் அமெரிக்காவில் உள்ள அனைவரையும் இந்தக் கொள்கை பாதிக்கும். இதுதொடர்பான அறிக்கையில், அமெரிக்க குடியுரிமையை பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு நடைமுறைகளை, அவர்களது நாட்டிலேயே உள்ள அமெரிக்க  தூதரகச் செயலாக்கத்தின் மூலமே மேற்கொள்ள வேண்டும். ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவின் குடியுரிமையை பெற தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும்போது, ​​ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகக் கருத்தில் கொண்டு தொடர்புடைய அனைத்துக் காரணிகளையும் தகவல்களையும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின் இலக்கு என்ன?

இந்த புதிய கொள்கை சட்டத்தின் அசல் நோக்கத்தை மீட்டெடுக்கிறது என்றும், தற்காலிகப் பணியாளர்கள் தங்களின் அங்கீகரிக்கப்பட்ட தங்குவதற்கான காலம் முடிந்த பிறகு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிமேல், அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கி க்ரீன் கார்டு பெற விரும்பும் ஒரு வெளிநாட்டவர், விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, மற்றபடி விண்ணப்பிப்பதற்காகத் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும். இந்தக் கொள்கை, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவின் குடிவரவு அமைப்பு, சட்டம் நோக்கம் கொண்டபடி செயல்பட அனுமதிக்கிறது" என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை மறுக்கப்பட்ட பிறகு தலைமறைவாகி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டிய தேவையை இந்த நடைமுறை குறைக்கும் என்று அரசு நம்புகிறதாம். மேலும், இந்த செயல்முறை USCIS மீதான சுமையைக் குறைத்து, மனிதாபிமான வழக்குகள் மற்றும் குடியுரிமை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பிற குடிவரவு முன்னுரிமைகளில் கவனம் செலுத்த அந்த அமைப்புக்கு உதவும் என கூறப்படுகிறது.

பெரும்பாலான வழக்குகளை வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மூலம் அனுப்புவது, வன்முறைக் குற்றங்கள் மற்றும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசா விண்ணப்பங்கள், அத்துடன் குடியுரிமை பெறும் வழக்குகள் உள்ளிட்ட பிற முன்னுரிமைகளில் USCIS தனது வரையறுக்கப்பட்ட வளங்களைச் செலுத்த அனுமதிக்குமாம்.

இந்தியர்களுக்கான பாதிப்பு..

அமெரிக்காவின் குடியுரிமையை பெறும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இந்தியா உள்ளது. அண்மைக்காலங்களில் வழங்கப்பட்ட க்ரீன் கார்ட்களில் 7 சதவிகிதம் சுமார் 78 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்நிலையில், அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடவடிக்கையானது இந்தியர்களுக்கு புதிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்தும் H1B விசாக்களுக்கும் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.