கடந்த வாரம், வடகிழக்கு டெல்லியில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளனர். நல்வாய்ப்பாக, அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, பஜன்புராவின் வினய் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


நஃபீஸ் மாலிக் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத மூன்று பேர் அவர்களது வீட்டிற்கு தீ வைத்தனர். அவர்கள் எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். 


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோவில், குடியிருப்பு பகுதிக்கு நடுவே உள்ள குறுகிய பாதையில் நஃபீஸின் வீட்டிற்கு கண்டெய்னர்களுடன் மூன்று பேர் நடந்து செல்வதைக் காணலாம்.


அந்த வீடியோவில், ஒருவர் எரியக்கூடிய திரவத்தை வீடு முழுவதும் வீசுகிறார். மற்றொரு நபர், தீக்குச்சிகளை பற்றவைத்து மாலிக்கின் வீட்டிற்கு தீ வைக்க முயற்சி செய்வதை காணலாம். மூன்றாவது முயற்சியில் வீட்டில் தீ பற்றி கொள்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


இதில், வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது. வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட 3 பேரையும் காணவில்லை.


அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.


மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.