Gurugram Traffic Jam: குருகிராமில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு நடுவே 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குருகிராமில் கடும் போக்குவரத்து நெரிசல்:

திங்கள்கிழமை குருகிராமில் பெய்த கனமழையால், இரவு நேரத்தில் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 7 முதல் 8 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

சாலைகள் அதிக அளவில் நீரில் மூழ்கியிருந்தன. செவ்வாய்க்கிழமை அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கடும் அவதி:

வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர், அவசர வேலைகள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் என பல தரப்பட்ட மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு கடும் அவதிக்கு ஆளாகினர். ஹாரன் ஒலிகள் சாலை முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தன. திருவிழாக்காலங்களில் போடப்படும் ஒளி விளக்குகளை போன்று, சாலைகள் வாகனங்களில் விளக்குகளால் நிறைந்து காணப்பட்டன. இரண்டு மணி நேரம் பெய்த மழையை கூட நகரம் தாங்காது என்றால், எங்களின் வரிப்பணம் எல்லாம் எங்கே செலவிடப்படுகிறது? என குருகிராம் மக்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாஜக மீது குவியும் விமர்சனங்கள்:

வெள்ள பாதிப்பு தொடர்பான வீடியோவை பகிர்ந்து, பாஜகவின் "மில்லினியம் நகர நகர்ப்புற மேம்பாட்டின் மூன்று இன்ஜின் மாதிரியை காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜ்வாலா கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தில் இருந்தும் கூட, குருகிராம் மக்களுக்கான சேவையை பாஜகவால் செய்ய முடியவில்லை என விமர்சித்துள்ளார். மேம்பாட்டிற்கான கோடிக்கணக்கில் வரிப்பணத்தை முதலீடு செய்வதாக பாஜக தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அதற்கான எந்த பலனையும் மக்கள் பெரவில்லை என்பதையே இந்த படங்கள் காட்டுகின்றன என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கௌரவ் பாண்டி குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரிகள் தரப்பில் 7 கிலோ மீட்டர் தூரம் என கூறப்பட்டாலும், 20 கிலோ மீட்டர் தூரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.