உலகின் நம்பர் 1 பணக்காரரும் பில்லியனருமான எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது முதல், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் வேலை மற்றும் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற மனநிலையுடனும் விரக்தியுடனும் வலம் வருகின்றனர்.
ஊழியர்கள் பணிநீக்கம், ஆட்குறைப்பு இன்று (அக்.04) முதல் தொடங்கும் என்று ட்விட்டர் நிறுவனம் முன்னதாக அறிவித்தது. அதன்படி ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் முன்னதாக வெளியாகின.
சில ஊழியர்கள் ஏற்கனவே தங்கள் பணிநீக்கம் குறித்த மின்னஞ்சல்களைப் பெறத் தொடங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தளத்திலேயே அது குறித்து பலர் பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பணி நீக்க நடவடிக்கையால் ஊழியர்கள் மனமுடைந்துள்ள நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் முன்னதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பகிர்ந்துள்ள பதிவு இணையவாசிகளை ஈர்த்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
25 வயது யாஷ் அகர்வால் எனும் நபர் பகிர்ந்துள்ள பதிவில், “இப்போதுதான் ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். இந்த குழுவில் ஒரு அங்கமாக இருந்தது எனக்கு மிகப்பெரும் பாக்கியம், பெரும் மரியாதை. நீங்கள் பணியாற்றிய இடத்தைக் காதலியுங்கள்” எனக்கூறி ட்விட்டர் அலுவகலத்தில் தான் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இன்று மதியம் யாஷ் பகிர்ந்த இந்த ட்வீட் சில மணிநேரங்களிலேயே லைக்ஸ்களை அள்ளி, அவரது நேர்மறையான கண்ணோட்டம் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
புளூ டிக்கான சரிபார்ப்பு செயல்முறைக்காக ட்விட்டர் பொறியாளர்களுக்கு நவம்பர் 7ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி சரிபார்ப்பு வசதியை தொடங்க வேண்டும் அல்லது வேலையை இழக்க நேரிடும் என மஸ்க் கெடு விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சில ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என்று சிஎன்பிசி ஆதாரங்கள் கூறுகின்றன.
எலான் மஸ்க் 50 விழுக்காடு ஆட்குறைப்பு என மிரட்டி, ஊழியர்களை உத்தரவுக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.