ஒலிம்பிக்ஸில் மல்யுத்தப் போட்டிகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை ஒலிம்பிக்கில் வென்ற இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் வினேஷ் போகத் பெயர் செய்திகளில் அதிகம் அடிபட்டது அனைவரும் அறிந்ததே...


இதுதவிர்த்து அவரின் குடும்பப் பின்னணி, விளையாட்டு, விருதுகள், காதல் திருமணம், தகுதி நீக்கம் என அவர் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.




பெரியப்பா வீட்டில் வளர்ந்த வினேஷ்


ஹரியாணாவைச் சேர்ந்த வினேஷ் போகத்தின் குடும்பம், அடிப்படையிலேயே மல்யுத்தம் சார்ந்த குடும்பமாகும். இவரின் தந்தை ராஜ்பால் போகத் ஒரு மல்யுத்த வீரர். வினேஷ், பிரியங்கா ஆகிய இருவரும் பிறந்து கொஞ்ச நாட்களிலேயே ராஜ்பால் போகத் இறந்துவிட, அவரின் மூத்த அண்ணனான மஹாவீர் போகத் (பெரியப்பா) வீட்டில்தான் வினேஷ் வளர்ந்தார்.


மஹாவீர் போகத்தின் 4 பெண்களும் மல்யுத்த வீராங்கனைகள்தாம். கீதா போகத், பபிதா போகத், ரிது போகத், சங்கீதா போகத் ஆகியோருடன் வினேஷ் போகத்தும், பிரியங்கா போகத்தும் ஒன்றாக மல்யுத்தப் பயிற்சி எடுத்தனர். பாரம்பரியப் பழக்கங்களில் ஊறியிருந்த கிராமத்தினர் மத்தியில் ஷார்ட்ஸ் அணிந்து, குட்டை முடியுடன் பெண்கள் விளையாடுவது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போகத் சகோதரிகளுக்கு, குடும்பத்தின் ஆதரவு இருந்ததால் சமாளிக்க முடிந்தது.




தங்கல் திரைப்படம்


மஹாவீரின் முதல் இரு பெண்கள் கீதா போகத், பபிதா போகத் கதைதான் 2016ஆம் ஆண்டு, தங்கல் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளிவந்தது. இந்த நிலையில், மூத்த சகோதரிகளைப் போன்ற வினேஷும் சிறப்பாகப் பயிற்சியில் ஈடுபட்டார். பல்வேறு சாதனைகளைத் தன்வசம் ஆக்கினார்.




2009-ல் முதன்முதலில் சர்வதேசப் பதக்கம் வென்றார் வினேஷ். அடுத்தடுத்து பதக்கங்களை அள்ளினார். 2018 ஆசியன் கேம்ஸில் தங்கப் பதக்கம், அதே ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம், 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018, 19ஆம் ஆண்டுகளில் 2 முறை ஆசிய சாம்பியன்ஷிப், 2016, 17, 18 ஆகிய ஆண்டுகளில் 3 முறை காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கங்களை வினேஷ் போகத் பெற்றுள்ளார். இந்தியாவின் தங்க மகளாக 2014-ல் அர்ஜூனா விருது, 2022-ல் பத்ம ஸ்ரீ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இத்தகைய சாதனைகளைப் படைத்ததற்காக இந்திய ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது.


காதல் திருமணம்


இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு முதல் நண்பராக இருந்தவரும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 முறை தங்கம் வென்றவருமான சோம்வீர் ரதீ டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோம்வீர் வினேஷிடம் காதலைத் தெரிவித்தார். வினேஷ் போகத்தும் ஓகே சொல்ல, 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.




8 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய சோக வரலாறு!


2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்ஸில் 48 கிலோ எடைப்பிரிவில் தகுதிச் சுற்றில் கலந்துகொண்டார் வினேஷ் போகத். அதில் 400 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே துயர வரலாறு மீண்டும் திரும்பியது.


தொடர்ந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காலிறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனையிடம் வீழ்ந்தார் வினேஷ் போகத். 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தின்போது முழங்கையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் வினேஷ் போகத். காயத்தில் இருந்து மீண்டு, 2022-ல் பதக்கம் பெற்றார்.




தெருவிலேயே பயிற்சி


2023-ல் அப்போதைய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் விவகாரத்தில் வீரர்களுடன் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார் வினேஷ். அப்போது முறையாகப் பயிற்சி செய்ய முடியாததால், தெருவிலேயே பயிற்சி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.




இந்த முறை 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸுக்குத் தகுதிபெற்ற வினேஷ் போகத், காலிறுதி, அரையிறுதியில் மளமளவென முன்னேறி, இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றார். ஆனால் பங்கேற்கும் முன்னாலேயே எடை கூடியதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . அவரின் 100 கிராம் எடை அதிகரிப்பால், 100 கோடிக்கும் மேலான இந்திய மக்களின் கனவும் ஆசையும் நொறுங்கியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.