பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் எனக் கூறி, சமூக வலைதளங்களில் ரத்த வெறி பிடித்து அலைந்த கும்பல், இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை குறிவைத்து வன்மம் நிறைந்த பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளனர். அதோடு நிற்காமல், அவரின் மகள் குறித்து இணைய ஆபாச தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக, அவர் தன்னுடைய எக்ஸ் கணக்கை லாக் செய்துள்ளார். தாக்குதல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பை வெளியிட்ட ஒரே காரணத்தால், விக்ரம் மிஸ்ரி ட்ரோல் செய்து வருகின்றனர்.

Continues below advertisement

ரத்த வெறி பிடித்து அலையும் கும்பல்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு, நம் நாட்டில் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. தாக்குதலோடு நிற்காமல் பாகிஸ்தான் மீது போர் நடத்த வேண்டும் என்ற கூக்குரல்கள் அதிகமாக காணப்பட்டன.

போரால் ஏற்படும் விளைவு என்ன என தெரியாமல் போரை ஆதரித்து பலர் வெளியிட்ட பதிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கராச்சி துறைமுகம் தாக்கப்பட்டதாகவும், பதுங்கு குழியில் பாகிஸ்தான் பிரதமர் பதுங்கியிருப்பதாக கூறி, பொய் பிரச்சாரங்களை நடத்தியவர்கள் இவர்களே.

Continues below advertisement

இந்தியாவின் ரியல் ஹீரோ:

இருப்பினும், இந்த பொய் பிரச்சாரங்களுக்கு எல்லாம் இடம் கொடுக்காமல், பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி. நாட்டு மக்கள் மட்டும் இன்றி, சர்வதேச நாடுகளே உற்று பார்த்த செய்தியாளர் சந்திப்பில் Cool, Calm and composed ஆக இருந்து பதில் அளித்தவர்.

ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் என்ன? பாகிஸ்தானில் எங்கு எல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டது? அப்பாவி மக்கள் எவ்வளவு பேர் உயிரிழந்தனர்? போன்றவற்றை சிறப்பாக விளக்கியிருந்தார். நாட்டுக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் நேர்மையாக பணியாற்றி வரும் விக்ரம் மிஸ்ரி, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங், மோடி ஆகிய மூன்று பிரதமர்களுக்கு தனிச் செயலாளராக இருந்துள்ளார். ஸ்பெயின், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதராக செயல்பட்டுள்ளார்.

மகள் மீது ஆபாச இணைய தாக்குதல்:

நாட்டின் 'ரியல் ஹீரோ'-ஆக திகழும் இவரை, இணையத்தில் உள்ள வலதுசாரிகள் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். மோசமான வார்த்தைகளை கூறி, திட்டி தீர்த்து வருகின்றனர். அதோடு நிற்காமல், இவரது மகளின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டு இணைய ஆபாச தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

பாகிஸ்தானுடன் உடனான அறிவிக்கப்படாத போரை நிறுத்துவதாக இந்தியா ஒப்புக்கொண்டதற்கு விக்ரம் மிஸ்ரி மீது வன்மத்தை கக்கி வருகின்றனர். இதனால், தன்னுடைய எக்ஸ் கணக்கை அவர் லாக் செய்துள்ளார். சர்வதேச அழுக்கம் காரணமாக போர் நிறுத்தம் தொடர்பான முடிவை எடுத்த பிரதமர் மோடியை விட்டுவிட்டு அறிவிப்பை வெளியிட்ட அதிகாரியிடம் தங்களின் கோழைத்தனத்தை காட்டி வருகின்றனர்.

வெட்கமா இல்லையா?

இந்தியாவின் வீரத்தை பறைசாற்றிய பாதுகாப்பு படைகளின் செய்தித் தொடர்பாளர்களான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் குறித்தும் எக்ஸ் தளத்தில் விமர்சனம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு, அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் தூதர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "நமது அரசு ஊழியர்கள், அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிர்வாகத் தலைமை அல்லது எந்த அரசியல் தலைமையும் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்கள் மீது பழி சுமத்தப்படக்கூடாது" என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை கிண்டல் செய்வது முற்றிலும் வெட்கக்கேடானது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.