உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10-ம்தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைஉருவானது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.



உத்தம்சிங் நகரிலுள்ள நானக் சாகர் அணை நிரம்பியதை அடுத்து அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால், தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்தது.சம்பாவத் என்ற இடத்தில் சல்தி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கவுலா நதியிலுள்ள மணல் திட்டான பகுதியில் யானை ஒன்று வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டது. ஹல்டுசவுர் மற்றும் லால்கவுனுக்கும் இடையே கவுலா நதியில் இந்த யானை சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு சென்று யானயை தேவ் ராம்பூர் வனப்பகுதியை நோக்கி துரத்தி விட்டதாக ஹால்ட்வானி மாவட்ட வனத்துறை அதிகாரி சந்தீப் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஏறத்தாழ வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட யானை வனத்துறையினரின் உடனடி செயலால் மீண்டும் உயிர்தப்பி பிழைத்து காட்டுக்குள் பத்திரமாக சென்றது.


வீடியோவை முழுமையாய் காண இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்


அங்கு யானை வெள்ளத்தில் அடித்து செல்லும் காட்சி வீடியோவாக வெளியாகி வைரலானது. கடைசியில் யானை தப்பித்ததால் காண்போர் அனைவரும் வனத்துறையினரையும் யானையின் தன்னம்பிக்கையையும் பாராட்டி வருகின்றனர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் விடியோ கண்ட அனைவரும் பெருமூச்சு விடுகின்றனர். ஆனாலும் இன்னும் விடாத பெரு மழையால் பலரும் அச்சத்தில் உள்ளனர். நைனிடால் ஏரி நிரம்பி, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்தது.நைனிதால் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மனித சங்கிலி அமைத்து ராணுவ வீரர்கள் மீட்டனர்.


நைனிடால் மாவட்டம் முக்தேஸ்வர் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.ஹல்த்வானி என்ற இடத்தில் கவுலா நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பாலம் உடைந்தது. அப்போது அந்த வழியாக பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை அப்பகுதி மக்கள் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.