டெல்லி பஸ்சிம் விஹார் பகுதியில் அண்டை வீட்டாரின் நாய் தன்னை நோக்கி குறைத்து கொண்டே இருந்தததால், வெறுப்பாகிய நபர் மூன்று பேரை இரும்பு தடியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை காவல்துறை உறுதி செய்துள்ளனர். முன்னதாக, அந்த நாய் தாக்கிய நபரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நபர் நாயையும் தாக்கியுள்ளார். இதில், நாயுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த முழு சம்பவமும், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தரம்வீர் தஹியா இன்று அதிகாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரரான ரக்சித்தின் நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது. இதனால் எரிச்சலடைந்த தரம்வீர் நாயின் வாலைப் பிடித்துத் தள்ளினார்.
நாயின் உரிமையாளர் தனது செல்லப்பிராணியை மீட்க வந்தபோது, தஹியா நாயை சரமாரியாக அடித்துள்ளார். பின்னர், நாய் அவரை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அப்போது, ரக்சித் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தஹியா இரும்பு கம்பியால் தாக்கினார். இதை தடுக்க வந்த அண்டை வீட்டுக்காரரான 53 வயதுடைய நபரையும் தஹியா தாக்கினார்.
அவர்களின் வீட்டிற்கு உள்ளே நுழைய தஹியா முயன்றபோது, அவரை தடுக்க வந்த பெண்ணை தஹியா தடியை கொண்டு தாக்கினார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வெளியான மற்றொரு வீடியோவில், தஹியா நாயின் தலையில் தடியால் அடிப்பதை பார்க்கலாம். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், நாய் கடித்ததற்காக தஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்