முக்கிய பதவிகளில் இருக்கும் சிலர் அரசியலமைப்புச் சட்டம் பற்றி அறியாமல் இருப்பது குறித்து குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வேதனையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி பேசியது என்ன?


அமெரிக்காவுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெண்கள் என்றாலே வீட்டில் இருந்தபடி சாப்பாட்டை சமைத்து தர வேண்டும். அதிகமாக பேசக்கூடாது என ஆர்எஸ்எஸ் விரும்புவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடுமையைாக எதிர்வினையாற்றியது.


இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சை மறைமுகமாக விமர்சித்துள்ள குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், "அவர்களுக்கு பாரதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு நமது தேச நலன் பற்றி எதுவும் தெரியாது.


இந்த நாடு 5000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தைக் கொண்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை" என குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வெளியே உள்ள ஒவ்வொரு இந்தியரும் இந்த நாட்டின் தூதராக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், "அரசியலமைப்பு பதவியை வகிக்கும் ஒருவர் அதற்கு நேர்மாறாக செயல்படுவது வேதனையளிக்கிறது.


கொதித்தெழுந்த குடியரசு துணைத் தலைவர்: நீங்கள் தேசத்தின் எதிரியாக மாறுவதை விட கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, சகிக்க முடியாத விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோர்கள், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், 18 அமர்வுகளுக்கு மேலாக எந்தவித இடையூறும் இல்லாமல்,  கோஷங்கள் எழுப்பாமல், சுவரொட்டிகள் உயர்த்தப்படாமல் மூன்று ஆண்டுகள் கடினமாக உழைத்ததன் விளைவாக அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.


விவாதம், உரையாடல், கலந்துரையாடல் ஆகியவற்றின் இடையே  அரசியலமைப்பு செயல்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். அவர்கள் முன் இருந்த சவால்கள் இமயமலை அளவுக்கு அதிகமாக இருந்த போதிலும், அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். இப்போது சிலர் நம் நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். இது அதீத அறியாமை!" என்று அவர் மேலும் கூறினார்.


இந்திய அரசியலமைப்பின் முகப்புரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், இந்திய மக்களாகிய நாம் அதன் ஊற்றுக்கண்ணாக இருக்கிறோம். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.


ஆனால், யாரோ ஒருவர் இந்த நாட்டிற்கு வெளியே சகோதரத்துவத்தை துண்டு துண்டாக கிழிக்க விரும்புகிறார், இல்லாத ஒரு சூழ்நிலையை கற்பனை செய்கிறார் என்று அவர் கூறினார்.