"அவங்க பண்ணிட்டாங்க.. நாம எப்போ பண்ண போறோம்" சட்டவிரோத குடியேறிகளுக்கு குறி.. துணை ஜனாதிபதி பிளான்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தியது போல் நம் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கை எப்போது தொடங்கும் என்று ஒவ்வொரு இந்தியனும் கேள்வி கேட்க வேண்டும் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்தல் நடைமுறையில் சட்டவிரோத குடியேறிகள் குறுக்கிடுவதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தியது போல் நம் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கை எப்போது தொடங்கும் என்று ஒவ்வொரு இந்தியனும் கேள்வி கேட்க வேண்டும் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு குறிவைக்கும் தன்கர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் 65வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், "இந்தியாவில் வாழ உரிமை இல்லாத கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இங்கே தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் நமது வளங்களை கேட்கிறார்கள்.
கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி என எல்லாவற்றிலும் கேட்கிறார்கள். இப்போது விஷயங்கள் இன்னும் அதிகமாகிவிட்டன. அவர்கள் நமது தேர்தல் நடைமுறையில் தலையிடுகிறார்கள். நாட்டில் ஒரு மனநிலையை பரப்புவது, அத்தகைய சூழலை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும். ஒவ்வொரு இந்தியனும் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.
மதமாற்றங்கள் குறித்து சர்ச்சை கருத்து:
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டதை மறைமுகமாக குறிப்பிட்ட துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், "சில நாடுகள் ஏமாற்றி அங்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களை சமீபத்தில் நாடு கடத்தின. ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு கேள்வி எழ வேண்டும். அதை எப்போது இங்கு செய்யத் தொடங்குவோம்? என்று.
இளைஞர்கள் சக்திவாய்ந்த அழுத்தக் குழுவாகச் செயல்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத்திடம் அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்களா என்று கேட்க வேண்டும். தேசியவாதமே நமது மதம். அதற்கே முன்னுரிமை தர வேண்டும். ஒரு நபர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். ஆனால், இங்கு ஆசை வார்த்தை கூறி மதமாற்றங்கள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் மக்கள்தொகையை மாற்றுவதன் மூலம் மேலாதிக்கத்தைப் பெறுவதே நோக்கமாக இருக்கிறது. சில நாடுகளில் பெரும்பான்மை சமூகங்கள் மக்கள்தொகை படையெடுப்பு காரணமாக முடிவுக்கு வந்தன.
கடந்த 10 ஆண்டுகளில், நாடு அதிவேக பொருளாதார உயர்வை எட்டியுள்ளது. தனித்துவமான உள்கட்டமைப்பு எழுச்சி பெற்றுள்ளது. ஆழமான டிஜிட்டல் மயமாக்கல் நடந்துள்ளது. தொழில்நுட்ப ஊடுருவல் ஆகியவற்றைக் கண்டுள்ளது" என்றார்.