உலகளாவிய அமைதியே நிலையான வளர்ச்சிக்கான உத்தரவாதம் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். புவிசார் அரசியல் கட்டமைப்புகளும் மோதல்களும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான சர்வதேச ஈடுபாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், உலக அமைதிக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் இடையே உள்ள அடிப்படை தொடர்பை எடுத்துரைத்தார்.
"அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்கள்"
உலக விவகாரங்களில் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பில் மறுவரையறை செய்யப்பட்ட அணுகுமுறை தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இணையதள குற்றங்கள், பயங்கரவாதம் முதல் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தற்கால அச்சுறுத்தல்கள் வரை அனைத்தையும் எதிர்கொள்ள பலதரப்பு ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உலகளாவிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். "பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள், உலகளாவிய நடைமுறைகளில் இடையூறுகள் போன்ற சவால்கள் தற்போது உள்ளன" என்று அவர் கூறினார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இயந்திர கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சிக்கல்களை தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று தெரிவித்தார். தொழில்நுட்பங்கள் ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தன்கர் வலியுறுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவர் பேசியது என்ன?
"ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இந்தியாவின் தலைமையிலான ஜி-20 கருப்பொருளின் அடிப்படையில், அனைவருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில் இந்தியாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.
எல்லை கடந்த சவால்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு சிறந்த விழுமியங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் உலக நாடுகள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். அமைதியும் பாதுகாப்பும் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அடிப்படையானவை என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவரின் செயலாளர் சுனில் குமார் குப்தா, விமானப்படை அதிகாரிகள், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கமாண்டன்ட் மற்றும் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்-ஸ்டெப் என்ற இந்தத் திட்டத்தில் 21 நாடுகளைச் சேர்ந்த 27 சர்வதேச பிரதிநிதிகளும், 11 மூத்த இந்திய ராணுவ மற்றும் குடிமைப் பணி அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.