இன்று இந்தியாவின் அசைக்கமுடியாத கட்சியாக உருவெடுத்து இருக்கும் பாஜகவின் இமாலய வளர்ச்சியின் பாதையை வரைந்தால், அது தொடங்கும் இடம் வாஜ்பாய். அடல் பிஹாரி வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர். காந்தி சுற்றிய தறிச்சக்கரத்தில் நெய்த வெள்ளைத்துணியாய் காங்கிரஸை நேருவும், ராஜிவ் காந்தியும், இந்திரா காந்தியும் வழி நடத்தி வர… இந்திய மக்கள் அசைக்க முடியா நம்பிக்கையை வைத்திருந்த தொண்ணூறுகளில் பிரதமர் ஆனதே அவருடைய மிகப்பெரிய சாதனை தான். அப்போதும் அது அவருக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. இரு முறை வீழ்ந்து எழுந்தார். அவருக்கு அப்போதும் டிசைடிங் ஃபேக்டராக இருந்தது தமிழ்நாடு தான். 1996ல் பதவியேற்று 13 நாட்கள் இருந்தவருக்கு பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. தங்கள் அணிக்குப் போதிய பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்து, நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தார். அந்தச் சமயத்தில் எதிர்த் தரப்பில் இருந்த எம்.பி-களைப் பணம் கொடுத்து இழுக்க பி.ஜே.பி விரும்பவில்லை. இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா பிரதமரானார். 1996-ம் ஆண்டில் வாஜ்பாய் 13 நாள்களில் பதவி விலகியதாலேயே, பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வர வித்திட்டது. தேவகவுடா தலைமையிலான ஆட்சி இரண்டு ஆண்டுகள்கூடத் தொடர முடியாமல்போனது. பின்னர் 1998ல் மீண்டும் பதவியேற்றார் ஆனால் அப்போதும் 13 மாதங்கள் தான் ஆள முடிந்தது. பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த அதிமுக அரசின் ஜெயலலிதா அவர் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டார், அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே ஒரு ஓட்டில் பெரும்பான்மை நிரூபிக்கமுடியாமல் ஆட்சி கலைந்தது. அடுத்து 1999-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைத்தார். ஆனால், இந்தமுறை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமர் பதவியை அலங்கரித்த பெருமை வாஜ்பாயைச் சேரும்.



1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய், இந்தி மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். வாஜ்பாயி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நமிதா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அவருக்கு இயற்கையின் மீது தனி விருப்பம் உண்டு. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி அவருக்குப் பிடித்தமான இடங்களில் முதன்மையானது. இசையிலும் நடனத்திலும் ஆர்வம் அதிகம் கொண்டவர். பாஞ்சஜன்யா, ராஷ்டிரதர்மா ஆகிய இந்தி மாத இதழ்களிலும் அர்ஜுன், ஸ்வதேஷ் ஆகிய நாளேடுகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பல கவிதை நூல்களையும் சுயசரிதையையும் எழுதினார். தனது கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். வாஜ்பாய் கவிதைகள் என்ற தலைப்பில் தமிழிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. பல்வேறு கவிதை நூல்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ள அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர். ஆர்எஸ்எஸ் இதழிலும் அவர் எழுதியுள்ளார். அவர் தனது இளமை காலத்தில் ஒரு மார்க்சிஸ்டாக இருந்தார். ஆனால் அதன் கொள்கைகளை விட்டு விலகி ஆர்.எஸ்.எஸ், அமை்பபில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். 1951ம் ஆண்டு ஜன சங் கட்சியைத் தொடங்கினார். அவசரகாலச் சட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார். 2018ம் ஆண்டு தனது 93வது வயதில் வாஜ்பாய் மரணமடைந்தார். 2014 டிசம்பரில் வாஜ்பாய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு, பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. முன்னதாக பத்மவிபூஷண் விருதையும் வாஜ்பாய் பெற்றுள்ளார்.



50 ஆண்டுக்காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள வாஜ்பாய், மக்களவைக்கு ஒன்பது முறையும் மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1977-79ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். வாஜ்பாய் இளைய வயதில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளைக் கேட்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பெரிதும் பாராட்டிப் பேசினார். “வாஜ்பாய் என்ற இந்த இளைஞர் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்” என நேரு தன் கணிப்பை வெளியிட்டார். நேருவின் கணிப்பை வாஜ்பாய் தன் செயல்திறத்தால் செய்துகாட்டினார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி என வெவ்வேறு மாநிலங்களிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி வாஜ்பாய் மட்டும்தான். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்து எதிர்த்தவர். தனது நம்பிக்கைகளில் உறுதியாக இருந்தவர் வாஜ்பாய். சில நேரங்களில் ஆர்எஸ்எஸ் சிந்தனைகளிலிரு்ந்தும் அவர் மாறுபட்டுள்ளார். பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த அவர் முயன்றார். ஆனால் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரே அதை விரும்பவில்லை. குஜராத் கலவரத்தைத் தடுக்க முயற்சித்தபோது அது முடியாமல் போனது. நரேந்திர மோடிக்கும் வாஜ்பாய்க்கும் நடுவே பெரிய நல்லுறவு இருந்ததாகக் கூற முடியாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார் வாஜ்பாய். கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மோடிக்கு நெருக்கடி கொடுத்தார் வாஜ்பாய். ஆனால் அப்போது மோடிக்கு பக்கபலமாக இருந்து பாதுகாத்தவர் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி.



வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான், இமயம் முதல் குமரிவரை இணைப்பை ஏற்படுத்தியுள்ள தங்க நாற்கரச் சாலை திட்டம் திட்டமிடப்பட்டு, கொண்டுவரப்பட்டது. இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர் வாஜ்பாய். போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக அரங்கில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் இவரைச் சேரும். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்தான் "ரைட் டூ எடுகேஷன் இன் இந்தியா" என்ற திட்டத்தை சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் கொண்டு வந்தார். இது அனைவருக்கும் கல்வி என்ற பெயரில் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி வாய்ப்பு பெற்றனர். ரெண்டாயிரத்தின் தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் கல்வி கற்ற அனைவருக்கும் தெரியும், "எஸ்எஸ்ஏ வணக்கம்" என்றுதான் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தியிருப்பார்கள். வாஜ்பாயின் செயல்பாடுகள் கல்விதுறையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகி, வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் எனப் பல பதவிகளை வகித்த வாஜ்பாய், அரசியல் நாகரிகத்தின் அச்சாணியாய் விளங்கியவர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருடனும், தி.மு.க-வின் மறைந்த தலைவர் கருணாநிதி உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மாநிலக் கட்சிகளின் தலைவர்களுடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகச் சிறந்த நல்லுறவுகளைக் கொண்டிருந்தார்.



வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போர் மோதலை எதிர்கொண்டது இந்தியா. 1999 ஜூன் மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்த ஆபரேஷன் விஜய் என்ற தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டது. இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கி பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின; கார்கில் போர் இந்தியாவின் வெற்றியுடன் முடிந்தது. அதே போல 1999, 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளி காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம்... 2002-2003ல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ஃப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஜி.டி.பி'யில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய். மூன்றாவது முறை பிரதமரானபோது தான், 1999 டிசம்பரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது, 2001 டிசம்பரில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது, 2002 குஜராத் கலவரத்தில் சுமார் ஆயிரம் இந்து – முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்றவை வாஜ்பாய் அரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தின. தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய குறிப்பிடத்தக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சர்வதேச உறவுகளை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்கள் மற்றும் அந்நிய மூதலீடு ஊக்குவிப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப் அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்தார். இருப்பினும் ஆக்ராவில் இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 2001 ஆம் ஆண்டில் உச்சி மாநாடு ஏற்பாடு செய்தார் வாஜ்பாய். அதற்கு முஷ்ரப்புக்கு சிறப்பை அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் அந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிவடைந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் வாஜ்பாய் இந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். லாகூர் – டெல்லி இடையே முதல் பேருந்து சேவை தொடங்கி வைத்தார். அந்த பேருந்தில் முதல் ஆளாக பயணித்தார். மேலும் 1999ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. லாகூர் ஒப்பந்தம் எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மேலும் பிரச்னைகளைத் தீர்க்கவும் வர்த்தக உறவை மேம்படுத்தவும் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தவும் உறுதியளிக்கும் விதமாக அமைந்தது.



இந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஈர்க்கபட்டவர்தான் என்றபோதிலும், மதசார்பற்ற தலைவராகத்தான் விளங்கினார் வாஜ்பாய். 1991 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட வாஜ்பாய் அயோத்திக்கு செல்லவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார் வாஜ்பாய். பிராந்திய மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து சீனாவுடன் வணிக கூட்டு அமைத்தார். அந்த வணிக கூட்டு இன்றுவரை சீனாவை இந்தியாவுடன் போருக்கு வரவிடாமல் தடுத்து வருகிறது. பழங்குடி, சமூக நலன், சமூக நீதி போன்றவைக்கு அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கு தனி துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்பாய். ராஜீவ் காந்தி இறந்த பிறகு இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியானது 0.6 % இல் இருந்து 2.8% த்திற்கு உயர்ந்தது. இதற்கு பத்தாண்டுகள் எடுத்துக் கொண்டது இந்தியா. ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% இல் (1999) இருந்து 70% த்திற்கு (2012) உயர்த்தியது. இந்தச் சாதனையை ஒரு தொலைத் தொடர்பு துறையில் ஒரு புரட்சி என மாற்றுக் கட்சியினரும் பாராட்டினர். நிலாவுக்கு 2008 இல் இந்தியா விண்கலம் அனுப்பவிருக்கிறது என்று பெருமையுடன் கூறியவர் வாஜ்பாய். அதன் பின்புதான் இஸ்ரோ சந்திராயன் திட்டத்தை உருவாக்கியது. இன்று இஸ்ரோவின் வளர்ச்சி இந்த நிலையை எட்டியதற்கு வித்திட்டவரும் இவரது செயல்பாடுகள்தான். அதில் முக்கியமானது கலாமை குடியரசு தலைவர் ஆக்கியது.


இப்படி தன் செயல்முறைகளில் என்றும் மதவாதத்தை புகுத்தாத ஒரு பாஜகவின் முதலும் கடைசியுமான தலைவராகி மறைந்தார். 2001ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களுக்காக 10 அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டிருக்கிறார். ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டிருக்கிறது. பக்கவாதத்தினால் சரியாக பேசமுடியாத நிலை ஏற்பட்டது. சர்க்கரை நோயால் பல ஆண்டுகள் கடினமானதாகக் கழிந்திருக்கின்றன. 2005ஆம் ஆண்டுக்குப் பின் பொது வாழ்க்கையிலிருந்து விலகினாலும் தன் உடலுடன் போராடிக்கொண்டிருந்தார். 2009 க்கு பிறகு முற்றிலுமாக அரசியல் வாழ்வில் இருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு பல நாட்களை மறுத்துவமனையிலேயே செலவு செய்தார். மதசார்பற்ற இந்தியாவில் மதசார்புள்ள ஒரு காட்சியில் இருந்து வந்து முடிந்தவரையில் எல்லோருக்குமான பிரதமராக இருந்ததற்கான என்றும் அவரை இந்தியா நினைத்துப் பார்க்கும்!