சுமார் 490 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது:


உத்தரகாண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் வெளியேறும் பாதை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கினர். ஆனால், மீட்புக் குழுவினர் ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.


சுரங்கத்தில் துளையிடும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு மீட்பு பணியில் தடை நீடித்தது. அதேபோல் துளையிடும் போது மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இயந்திர கோளாறு என பல்வேறு சிக்கல் நடுவில் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில்,  17வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் இன்று நடைபெற்று முடிந்த நிலையில், 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.


முதலாவது நபர் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், உறவினர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளின் மூலம்  33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக 41 தொழிலாளர்களும் முழுமையாக மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலை அணிவித்து ஆரத்தழுவி வரவேற்றார். 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


பிரதமர் மோடி பாராட்டு:


இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புப் குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவிட்டிருப்பதாவது, ” உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்பட்டது உணர்ச்சிபூர்வமானது.


சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த தொழிலாளர்களின் தைரியமும், பொறுமையும் ஊக்கம் அளிக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.  நீண்ட போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் தற்போது தனது குடும்பத்தினரை சந்திப்பது என்பது மிகவும் திருப்திகரமாக உள்ளது. இந்த சவாலான நேரத்தில் தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும், தைரியமும் பாராட்டுக்குரிய விஷயமாகும்.






சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். அவர்களது துணிச்சலும் உறுதியும் தொழிலாளர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் கூட்டு முயற்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டாக கருதுகிறேன்" என்று  பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.