உத்தரகாண்ட் மாநில அரசு ஒதுக்கியுள்ள முதல்வருக்கான அரசு பங்களாவில் தீய சக்தி இருப்பதாகக் கூறி அந்த பங்களாவை மாஜிக்கள் புறக்கணித்து வந்த நிலையில், அம்மாநில புதிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி தைரியமாகக் குடிபுகுந்துள்ளார்.


மூன்று முதல்வர்கள் மாறிய கதை..


உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வராக திரேந்திர சிங் ராவத் இருந்தார். உட்கட்சி பூசலால் கடந்த மார்ச் மாதம் இவர் மாற்றப்பட்டார். புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். முதல்வராகப் பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும். கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி மேலிடம் முடிவு செய்தது. ஆனால் அடுத்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருப்பதால் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும். இதனால், தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து  அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


இதைத் தொடர்ந்து புதிய முதல்வராக பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்த புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.


இந்நிலையில் அவர் முதல்வருக்காக அரசு ஒதுக்கியுள்ள அந்த 'தீய சக்தி' பங்களாவில் குடிபுகுந்துள்ளார். இது குறித்து அவர், நான் எப்போதும் கடந்த காலத்தை நினைத்து வருந்துவதும் இல்லை, எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதும் இல்லை. ஆனால், நான் கர்மாவில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளேன். முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட பங்களாவை புறக்கணிப்பது என்பது அரசு வளங்களை வீணடிப்பதற்கு சமமாகும் என்று கூறினார். உத்தரகாண்ட் மாநிலம் புதிய கன்டோன்மன்ட் சாலையில் 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது முதல்வருக்கான அரசு பங்களா. இந்த பங்களாவுக்குச் சென்றால் முதல்வரால் முழுமையாக பதவிக்காலத்தை முடிக்க முடியாது என்று நம்பப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓராண்டுக்குள் மூன்று முதல்வர்கள் மாறியுள்ளனர். ராமேஷ் பொக்ரியால் நிஷாங்க், விஜய் பகுகுணா, திரிவேந்திர சிங் ராவத் ஆகிய மூன்று முதல்வர்களும் தத்தம் பதவிக்காலத்தை முழுமையாக முடிக்க முடியாமல் போனதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


இதனால் அவர்களுக்குப் பின் வந்த ஹரிஷ் ராவத், தீரத் சிங் ராவத் ஆகியோர் அந்த பங்களாவை தவிர்த்தனர். இருப்பினும் அவர்களும் முழுமையாக பதவிக்காலத்தை அனுபவிக்க முடியவில்லை. இந்நிலையில் புதிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, முதல்வர் பங்களாவில் சிறப்புப் பூஜைகள் செய்து குடி புகுந்துள்ளார்.