உத்தரபிரதேசம் கான்பூரை சேர்ந்த பெண், 18 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன தனது அண்ணனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கண்டுபிடித்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரீல்ஸ் வீடியோவில் உடைந்த பல்லோடு காணப்பட்ட அவரை தங்கை அடையாளம் கண்டுள்ளார்.


ஹதிபூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமாரி. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்த்து கொண்டிருந்த போது, ​​பரிச்சையமான முகம் ஒன்று அவரது கண்ணில் தென்பட்டுள்ளது. அவரை பார்த்தவுடன் ராஜ்குமாரி பேரின்பத்தில் திக்குமுக்காடி உள்ளார்.


18 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பாசமலர்: ரீல்ஸில் வந்த ஜெய்ப்பூரை சேர்ந்த இளைஞனுக்கு சிறுவயதில் காணாமல் போன தன்னுடைய சகோதரன் பால் கோவிந்திற்கு இருப்பது போன்று உடைந்த பல் இருந்துள்ளது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஃபதேபூரில் உள்ள இனயத்பூரில் இருந்து மும்பைக்கு வேலை தேடி சென்றுள்ளார் பால் கோவிந்த். 


அதன்பிறகு, அவர் திரும்பவில்லை. மும்பையை அடைந்த அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை செய்யத் தொடங்கினார். அவர் ஆரம்பத்தில் தனது நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். ஆனால், நண்பர்களுடன் பேசுவது படிப்படியாக குறைந்துள்ளது.


அவரது நண்பர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் கிராமத்திற்கே திரும்பினர். ஆனால், பால் கோவிந்த் மட்டும் மும்பையிலே தங்கியுள்ளார். அவரது உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. வீட்டிற்கு திரும்ப முடிவு செய்து ரயில் ஏறியுள்ளார்.


அண்ணன் தங்கையின் பாசப்போராட்டம்: அப்போதுதான், அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. கான்பூர் ரயிலுக்கு பதிலாக அவர் ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். சோர்வடைந்து, நிலைகுலைந்து போன பால் கோவிந்த், ரயில் நிலையத்தில் ஒருவரைச் சந்தித்தார். அந்த நபர், அவருக்கு தொழிற்சாலையில் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.


இதையடுத்து, அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக, அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளது. அவர் ஜெய்ப்பூரில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். ஈஸ்வரி தேவி என்ற பெண்ணை மணந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


பால் கோவிந்தின் வாழ்க்கையில் நிறைய மாறிவிட்டது. ஆனால், அவரது உடைந்த பல் மட்டும் மாறவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது உடைந்த பல்லின் மூலம்தான் பால் கோவிந்தின் வாழ்வில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


பால் கோவிந்தின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரை தொடர்புகொண்டுள்ளார் ராஜ்குமாரி. உணர்ச்சிவசப்பட்ட ராஜ்குமாரி, வீடு திரும்பும்படி தனது சகோதரனை கேட்டு கொண்டார். அவரது பாச மழையில் நனைந்த பால் கோவிந்த், வீட்டுக்கு வர உடனடியாக ஒப்புக்கொண்டார்.


18 வருட பிரிவிற்குப் பிறகு, கடந்த ஜூன் 20ஆம் தேதி, தனது சகோதரியுடன் மீண்டும் இணைந்துள்ளார் கோவிந்த். ஹதிபூருக்கு வந்து தங்கையை சந்தித்துள்ளார். இதுகுறித்து பேசிய ராஜ்குமாரி, "சமூக ஊடகங்களால் நல்ல விஷயங்கள் நடப்பதில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.


ஆனால், சில நேரங்களில் வாழ்க்கையின் நினைவுகளைப் புதுப்பித்து ஒரு எளிய வீடியோ எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. என் சகோதரன் திரும்பி வந்துவிட்டார். அதுவே, எனக்கான மிகப்பெரிய மகிழ்ச்சி" என்றார்.