உத்தரப் பிரதேசத்தில் வேறொரு நபருடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, சகோதரர் உதவியுடன் மனைவியை தீர்த்து கட்டியுள்ளார் அவரது கணவர். ஓராண்டுக்கு பிறகு, இளம்பெண்ணின் சடலத்தை ஓராண்டுக்கு பிறகு காவல்துறை கண்டெடுத்துள்ளது. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு, ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. கடந்தாண்டு, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் நகரில் சகோதரர் உதவியுடன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார் அவரது கணவர். அவரது சடலத்தை குப்பை தொட்டியில் புதைத்து வைத்தது ஓராண்டுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி பாரத் சோங்கர் கூறுகையில், "ஆசிஃபாவின் (28) எலும்புக்கூடுகளை போலீசார் கண்டெடுத்தனர். ஆசிஃபா, கமில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திடீரென அவரைக் காணவில்லை என்று அவரது சகோதரர் புகார் அளித்தார்.
இரண்டு வருடங்களாக கமில் தன்னுடன் பேச அனுமதிக்கவில்லை என்று ஆசிஃபாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 26ஆம் தேதி, சந்த்பூர் காவல் நிலையத்தில் ஆசிஃபாவின் தாயார் காணாமல் போனதாக புகார் அளித்தார்.
சந்தேகத்தின் பேரில் கமில் மற்றும் அவரது சகோதரர் அடிலை காவல்துறை விசாரணைக்காக கைது செய்தனர். விசாரணையின் போது, ஆசிஃபாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாக கமில் தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு, நவம்பர் 23ஆம் தேதி, தனது சகோதரர் அடில் மற்றும் அவர்களது அத்தை சாந்தினியின் உதவியுடன், ஆசிஃபாவை கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் அவரது உடலை புதைத்ததாக கமில் வாக்குமூலம் அளித்தார்.
நேற்று, ஆசிஃபாவின் உடல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள குப்பை மேட்டின் அருகே தரையில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள அத்தை சாந்தினியைத் தேடி வருகின்றனர்" என்றார்.