உத்தரப் பிரதேச மருத்துவமனையில் நடத்த தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் விபத்து என்றும் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும் இதுதொடர்பாக விசாரித்து வரும் இரண்டு நபர் கொண்ட கமிட்டி தெரிவித்துள்ளது.
10 குழந்தைகளின் உயிரை பறித்த விபத்து:
இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த வித சதிச் செயலோ அல்லது அலட்சியமோ இல்லை என்றும் அதன் காரணமாக இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் பிரிவில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்தன. தீ விபத்தானது மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) இரவு 10:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
இந்த தீ விபத்தில் 16 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய நிலையில், இதுதொடர்பாக விசாரிப்பதற்கு இரண்டு பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. ஜான்சி கமிஷனர் விபுல் துபே மற்றும் டிஐஜி கலாநிதி நதானி ஆகியோர் அடங்கிய குழு, 24 மணி நேரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
வெளியான அதிர்ச்சி தகவல்:
இந்த நிலையில், விபத்து தொடர்பாக முக்கிய தகவல்களை விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுவிட்ச்போர்டில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்றும், குழந்தைகள் இருந்ததால் ஸ்பிரிங்லர்கள் (தண்ணீர் தெளிப்பான்கள்) பொருத்தப்படவில்லை. இதனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் கமிட்டியிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்தில், குழந்தைகள் வார்டில் ஆறு செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மற்றும் இரண்டு டாக்டர்கள் இருந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் செவிலியர் ஒருவருக்கு கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.
மருத்துவமனை ஊழியர் மற்றும் மேலும் இருவர் தீயணைப்பு கருவிகளுடன் உள்ளே சென்றபோது சுவிட்ச்போர்டில் இருந்து தீ வேகமாக ஆக்ஸிஜன் செறிவூட்டியை (concentrator) நோக்கி பரவத் தொடங்கியது. ஆனால், அதற்குள் தீ கட்டுக்குள் வரவில்லை என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
கைக்குழந்தைகளை இழந்த பெற்றோர், மருத்துவமனை வளாகத்தில் கதறி அழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி, காண்போரை கதிகலங்க செய்துள்ளது.