உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பாய்ந்தோடும் கங்கை நதியில் படகு கவிழந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகில் 34 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இன்று காலை 7.30 மணி அளவில் படகு விபத்துக்குள்ளானது என்று போலீஸார் தெரிவித்தனர்.


இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியாதவது:


கேதாகாட் படித்துறை அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென உடைந்து நீரில் மூழ்கியது. இதையடுத்து படகில் இருந்த பயணிகள் கூச்சலிடத் தொடங்கினர். இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும்  உள்ளூர் நீச்சல் வீரர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினர். படகு மூழ்கியதும் படகோட்டி கங்கையில் குதித்து அவரது உயிரை
காப்பாற்றிக் கொண்டார்.






படகில் இருந்த 34 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுவரை யாருக்கும் எதுவும் ஆகவில்லை. காயம் கூட ஏற்படவில்லை. உரிய நேரத்தில் பயணிகள் மீடக்கப்பட்டுவிட்டனர். 2 பயணிகள் மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.


காசியில் விஸ்வநாதர்-அன்னப்பூர்ணி கோயில் உள்பட பல்வேறு கோயில்கள் உள்ள நகரமாகும். இங்கு தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில தமிழ் படங்கள் கூட வாராணசியில் படமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வாராணாசி என்கிற காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை காசியில் நடைபெற இருக்கிறது. இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவை இந்த சங்கமத்தில் நடைபெற இருக்கிறது.


தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி கைவினை பொருட்கள் ஆகியவை அடங்கிய பொருட்காட்சி நடைபெற இருக்கிறது. பரதநாட்டியம், கர்நாடக இசை தமிழ் இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும். தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், கரகம், பட்டிமன்றம், தமிழ் நாட்டுப்புற நடனங்கள், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவை காசியில் உள்ள மக்கள் ரசிப்பதற்காக அரங்கேற்றப்பட இருக்கின்றன.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பதிவர்கள் இந்த சங்கமத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.